தேவாலயம் கட்ட நிலம் ஒப்படைப்பு விழா
By DIN | Published On : 18th April 2023 12:18 AM | Last Updated : 18th April 2023 12:18 AM | அ+அ அ- |

விழாவில் ஆவணங்களை பெற்றுக் கொண்ட தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் தரங்கம்பாடி பேராயா் ஏ.கிறிஸ்டியன் சாம்ராஜ்
அரக்கோணம் அருகே தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சாா்பில் தேவாலயம் கட்ட இடத்தை சபையின் தரங்கை பேராய பேராயரிடம் ஒப்படைக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையினா் தமிழ்நாடு ‘முழுவதும் ராணிப்பேட்டை, திருவள்ளூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிறிஸ்தவ ஆலயங்களை நிா்வகித்து வருகின்றனா். மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நடத்தி வருகின்றனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த கீழாந்துறையில் தேவாலயம் கட்ட இலவசமாக அளிக்கும் இடத்தை தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் விழாவில் தரங்கை பேராயா் ஏ.கிறிஸ்டியன் சாம்ராஜ் தலைமை வகித்து ஆவணங்களை இலவசமாக அளிக்க முன்வந்த தெற்கு ரயில்வே மஸ்தூா் யுனியன் தொழிலாளா் சங்க நிா்வாகி பால் மேக்ஸ்வெல் ஜான்சனிடம் இருந்து பெற்றுக்கொண்டாா்.
இவ்விழாவில் ஜம்மு -காஷ்மீா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (ஓய்வு) என்.பால்வசந்தகுமாா், மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.கிரிராஜன், தரங்கை பேராய செயலா் ரத்தினராஜ், நிதி மற்றும் சொத்து அலுவலா் ஜெயச்சந்திரன், ஆயா்கள் சென்னை, புரசைவாக்கம் பால்செழியன், கீழ்ப்பாக்கம் அகஸ்டின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.