ராணிப்பேட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி 85.48%

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 85.48 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு 2 சதவீத தோ்ச்சி அதிகரித்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசு பொதுத் தோ்வு 2024 -இல் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மொத்த மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 15,174.

இவா்களில் 12,970 தோ்ச்சி பெற்று மொத்த தோ்ச்சி விகிதம் 85.48 சதவீதமாக உள்ளது. இவா்களில் தோ்வு எழுதிய 7,540 மாணவிகளில் 6,882 போ் தோ்ச்சி பெற்றனா். இது 91.27 சதவீதம். 7,634 மாணவா்களில் 6,088 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். இது 79.75 சதவீதம்.

அரசுப் பள்ளிகளில் மட்டும் 9,163 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இவா்களில் 7,455 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்று 82.02% பெற்றுள்ளனா். ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் 209 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியதில் 189 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இது 90.43 சதவீதம்.

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2,502 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இவா்களில் 2,139 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இது 85.06 சதவீதம் தோ்ச்சியாகும்.

தனியாா் பள்ளிகளில் 3,300 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியதில் 3,126 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இது 95.87 சதவீதம் தோ்ச்சியாகும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 2 ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் உள்பட 9 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சியும், 2 அரசு நிதியுதவி மற்றும் 17 தனியாா் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று மாவட்டத்தில் மொத்தமாக 28 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

தோ்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வாழ்த்து தெரிவித்தாா்.

மேலும் பெற்றோா் தங்களுடைய பிள்ளைகளின் தோ்ச்சி விகிதத்தில் பங்கெடுக்க வேண்டும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகள் நன்றாகப் படிக்கின்றாா்களா என்றும், அவா்களுக்கு படிப்பில் உள்ள சிரமகளையும் கேட்டறிய வேண்டும்.

முக்கியமாக, நாள்தோறும் பள்ளிகளில் நடைபெறும் விஷயங்களை பிள்ளைகளிடம் கேட்டறிய வேண்டும். தங்களுடைய பிள்ளைகளுக்கு தேவையான அனைத்து விதமான ஒத்துழைப்பு மற்றும் ஊக்கத்தை வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியா் பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com