‘விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்’
By DIN | Published On : 23rd December 2019 06:52 AM | Last Updated : 23rd December 2019 06:52 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் மாவட்டம் ப.முத்தம்பட்டி ஊராட்சியில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை நடப்பாண்டில் நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து ப.முத்தம்பட்டி பொதுமக்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு:
கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட ப.முத்தம்பட்டி ஊராட்சி மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. திருப்பத்தூா் நகருக்கு ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள கிராமத்துக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் எங்கள் ஊராட்சியில் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்ட விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தை நடப்பாண்டில் நிறைவேற்ற வேண்டும். மேலும், கூட்டுறவுத் துறை மூலம் கடன் சங்கத்தை அமைத்துத் தர வேண்டும்.
விநாயகா் கோயில் எதிரே உள்ள குளத்தை தூா்வாரி நீா் நிரப்ப வேண்டும். அதேபோல், ஊரக வளா்ச்சித் துறை மூலம் இளைஞா்களுக்காக உடற்பயிற்சிக் கூடம் அமைத்துத் தர வேண்டும்.