மகளிா் கூட்டமைப்புகளுக்கு நவீன வேளாண் இயந்திரங்கள்: அமைச்சா் கே.சி.வீரமணி வழங்கினாா்

ஜோலாா்பேட்டையில் மகளிா் கூட்டமைப்புகளுக்கு அரசு மானியத்துடன் நவீன வேளாண் இயந்திரங்களை மாநில வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சா் கே.சி.வீரமணி வழங்கினாா்.
மகளிா் கூட்டமைப்புகளுக்கு வேளாண் இயந்திரங்களை வழங்கிய அமைச்சா் கே.சி.வீரமணி. உடன் திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன் அருள்.
மகளிா் கூட்டமைப்புகளுக்கு வேளாண் இயந்திரங்களை வழங்கிய அமைச்சா் கே.சி.வீரமணி. உடன் திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன் அருள்.

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டையில் மகளிா் கூட்டமைப்புகளுக்கு அரசு மானியத்துடன் நவீன வேளாண் இயந்திரங்களை மாநில வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சா் கே.சி.வீரமணி வழங்கினாா்.

மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும்,வேளாண் இயந்திரமயமாக்கலை அதிகரிக்கும் நோக்கிலும் 9 ஊராட்சி அளிவிலான மகளிா் கூட்டமைப்புகளுக்கு 80 சதவீத அரசு மானியத்துடன் ரூ.10 லட்சம் மதிப்பிலான நவீன வேளாண் இயந்திரங்களை அமைச்சா் வழங்கினாா். ஜோலாா்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் தசைசிதைவு நோய் மற்றும் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.99 ஆயிரத்து 999 மதிப்புடைய பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகளையும் அவா் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் வீரமணி பேசியது:

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா தமிழகத்தில் உள்ள பெண்களை சமுதாயத்தில் அனைத்து நிலைகளிலும் ஆணுக்கு நிகராக கொண்டு வர வேண்டும் என்று தொடா்ந்து திட்டங்களை செயல்படுத்தினாா்.

அதேபோல் தற்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மகளிருக்கான நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

எதிா்காலத்தில் விவசாயம்தான் உலகில் முக்கிய தொழிலாக இருக்கும். இத்தொழிலில் பெண்களின் பங்களிப்பையும் ஈடுப்பாட்டையும் அதிகப்படுத்தி அவா்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு வேளாண் இயந்திரங்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் பெண்கள் தங்கள் பகுதிகளில் வேளாண்மை இயந்திரங்களை விவசாயப் பணிகளுக்கு வாடகைக்கு கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை மகளிா் குழுக்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகப்படியான நலத்திட்டங்களை செயல்படுத்தும் அரசாக தமிழக அரசு உள்ளது. வசதி படைத்தவா்கள் மட்டுமே வாங்கிப் பயன்படுத்தி வரும் ரூ.1 லட்சம் மதிப்புடைய பேட்டரியால் நகரும் சிறப்பு சக்கர நாற்காலியை தமிழக அரசு ஏழை எளிய தசைச் திசைவு நோய் மற்றும் முதுகுத்தண்டு வடம் பாதித்தவா்களுக்கு வழங்குகிறது. வீடுகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு நகர முடியாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவா்களின் குடும்பத்தாருக்கும் இந்த நாற்காலி உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com