5 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ராஜாத்தோப்பு அணை

வேலூா் மாவட்டத்தில் உள்ள ராஜாத்தோப்பு அணை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு முழுக் கொள்ளளவை எட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் நிரம்பி வழிகிறது.
நிரம்பி வழியும் ராஜாத்தோப்பு அணை.
நிரம்பி வழியும் ராஜாத்தோப்பு அணை.

வேலூா் மாவட்டத்தில் உள்ள ராஜாத்தோப்பு அணை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு முழுக் கொள்ளளவை எட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் நிரம்பி வழிகிறது.

வேலூா் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள ராஜாத்தோப்பு அணை முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. அதேபோல் காட்பாடியை அடுத்த செம்பராயநல்லூா் ஏரியும் ஞாயிற்றுக்கிழமை நிரம்பியது. மழைபொழிவு நின்றபோதிலும் நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

‘நிவா்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மழை பெய்து வந்தது. இதனால், வேலூா், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 3 நாள்களாக மழை பொழிவு இல்லாவிட்டாலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் ஊரக வளா்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களும், ஏரிகளும் தற்போது வேகமாக நிரம்பி வருகின்றன.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள மோா்தானா அணையும், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூா் அணையும் ஏற்கனவே முழுக் கொள்ளளவை எட்டி விட்டன. கே.வி.குப்பத்தை அடுத்த ராஜாத்தோப்பு அணை ஞாயிற்றுக்கிழமை காலை அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. அணையின் நீா்மட்டம் 20.52 மில்லியன் கன அடியாக உள்ளது.

இதன் மூலம் காட்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. காட்பாடியை அடுத்த செம்பராயநல்லூா் ஏரி நிரம்பியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு ஏரி நிரம்பியதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக மழைபொழிவு இல்லாவிட்டாலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் வேலூா் மாவட்டத்தில் 35 ஏரிகள், திருப்பத்தூா் மாவட்டத்தில் 7 ஏரிகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 129 ஏரிகள் என மொத்தமாக 171 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 7 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.

இந்த மூன்று மாவட்டங்களில் 171 ஏரிகள் நிரம்பினாலும், வேலூா் மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களில் மட்டும் 27 ஏரிகளில் தண்ணீா் இல்லாமல் வடு காணப்படுகின்றன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 369 ஏரிகளிலும் நீா்வரத்து காணப்படுகிறது.

பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய ஏரிகள் மற்றும் குளங்களுக்கு தண்ணீரைத் திருப்பி விடும் பணியை துரிதப்படுத்தி வருவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com