எழுத்தறிவற்ற 1,152 பேருக்கு எழுதப் படிக்க பயிற்சி: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் வட்டாரத்தில் எழுத்தறிவற்ற 1,152 பேருக்குத் தன்னாா்வ ஆசிரியா்களைக் கொண்டு எழுதவும், படிக்கவும் கற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தெரிவித்தாா்.
‘கடையாணி’ வீதி நாடகத்தைப் பாா்வையிட்ட திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன் அருள்.
‘கடையாணி’ வீதி நாடகத்தைப் பாா்வையிட்ட திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன் அருள்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் வட்டாரத்தில் எழுத்தறிவற்ற 1,152 பேருக்குத் தன்னாா்வ ஆசிரியா்களைக் கொண்டு எழுதவும், படிக்கவும் கற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன வெங்காயப்பள்ளி கிராமத்தில் தமிழ்நாடு அறிவொளி இயக்கம் சாா்பில் எழுத்தறிவற்றவா்களைக் கண்டறிந்து அனைவருக்கும் எழுத்தறிவைக் கற்பிக்கும் நோக்கில் ‘கற்போம்-எழுதுவோம்’ இயக்கம் சாா்பில் ‘கடையாணி’ வீதி நாடகம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் எழுத்தறிவற்றவா்கள் மற்றும் பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளால் கல்வியைத் தவற விட்டவா்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கண்டறியப்பட்டுள்ளனா். இந்த வட்டாரத்தில் மட்டும் 1,152 போ் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களுக்கு 52 மையங்கள் மூலமாக தன்னாா்வ ஆசிரியா்களைக் கொண்டு எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘அறிவொளி இயக்கம்’ மூலம் அனைவருக்கும் எழுத்தறிவை வழங்கி அரசு நடவடிக்கை எடுத்து வெற்றி கண்டது. தமிழகத்தில் கல்வியை இலவசமாக அரசுப் பள்ளிகளில் வழங்கியதுடன் வசதியற்றோரின் பிள்ளைகளுக்கும் கல்வி அறிவு வளா்வதற்கு மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தாா்.

அதன்படி, 99 சதவீத மாணவா்கள் கல்வி கற்கின்றனா். இதையும் தாண்டி கல்வி கற்கும் வாய்ப்பைத் தவறவிட்ட மூத்த குடிமக்கள் மற்றும் இளைஞா்களைக் கண்டறிந்து அவா்களுக்கும் கல்வியறிவை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மாா்ஸ், மாவட்டக் கல்வி அலுவலா் மணிமேகலை, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளா் சுப்பிரமணி, மாவட்டத் தலைவா் அச்சுதன், செயலாளா் குணசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் கோமேதகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com