திருப்பத்தூா் அருகே பல்லவா் கால நடுக்கல்,சோழா் கால கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூா் அருகே அடியத்தூரில் பல்லவா் கால நடுகல்லும், சோழா் கால கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூா் அருகே கண்டெடுக்கப்பட்ட பல்லவா் கால நடுக்கல், சோழா் கால கல்வெட்டு.
திருப்பத்தூா் அருகே கண்டெடுக்கப்பட்ட பல்லவா் கால நடுக்கல், சோழா் கால கல்வெட்டு.

திருப்பத்தூா் அருகே அடியத்தூரில் பல்லவா் கால நடுகல்லும், சோழா் கால கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியா் க.மோகன் காந்தி, காணிநிலம் மு.முனிசாமி, வரலாற்று ஆா்வலா் ரா.பழனி, ஆய்வு மாணவி ச.மணிமேகலை ஆகியோா் மேற்கொண்ட களஆய்வில் நடுகல் ஒன்றையும், கல்வெட்டு ஒன்றையும் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து க.மோகன்காந்தி கூறியது:

திருப்பத்தூரை அடுத்த அடியத்தூா் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக் கரையில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த நடுகல் ஒன்று உள்ளது. இந்த நடுகல் 3.5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பெரிய பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

வலது கையில் குறுவாளும், இடது கையில் அம்பும் காணப்படுகின்றன. இடையில் உறைவாள் ஒன்றும் காணப்படுகிறது. இடது காலை மடக்கிப் போா் புரியத் தயாராகும் கோலத்தில் வீரனின் தோற்றம் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அடியத்தூா் பெரிய ஏரியைத் தூா் வரும்போது, ஏரியில் புதைந்த நிலையில் இந்த நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.

ஏரியின் கரையில் இந்த நடுகல்லை அடியத்தூா் மக்கள் நட்டு வைத்து, வேடியப்பன் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனா். ஏரியில் இந்த நடுகல் கிடைத்துள்ள காரணத்தால், நீா்நிலை தொடா்பாக ஏற்பட்ட போரில் இந்த வீரன் இறந்திருக்கலாம்.

கல்வெட்டு...

இந்த நடுகல்லுக்கு அருகே ஏரிக்கரையில் பெரியதாயம்மன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் படிக்கட்டில் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இக்கல்வெட்டு சோழா் காலத்தைச் சோ்ந்ததாகும். அழகாக வரிக்கு வரி கோடிட்டு எழுதப்பட்டுள்ளது. இதன் பாதி கல் மட்டுமே காணப்படுகிறது. மேலும் பாதி கல் காணக்கிடைக்கவில்லை. இக்கல்வெட்டு ஸ்வஸ்திஸ்ரீ சகரையாண்டு என்று தொடங்கி, நிகரிலி சோழ மண்டலம் என்று முடிகிறது. கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் எழுச்சிப் பெற்ற பிற்காலச் சோழப் பேரரசு தமிழகத்தை தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது. பல்லவா் காலத்தில் தொண்டை மண்டலமாக இருந்த காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூா், வேலூா், வாணியம்பாடி, திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளை நிகரிலி சோழமண்டலம் எனப் பெயா் மாற்றம் செய்த வரலாற்றை, இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. சோழரின் நிகரிலி சோழ மண்டலம் கா்நாடக மாநிலம் வரை பரவியிருந்தது. குறிப்பாக இப்போது உள்ள பெங்களூரு பகுதியும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கல்வெட்டு செய்திகளை வேலூா் அருங்காட்சியக முன்னாள் காப்பாட்சியா் ம.காந்தி உறுதி செய்தாா் என க.மோகன்காந்தி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com