கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இளைஞா் திடீா் மரணம்: கோட்டாட்சியா் விசாரணை

வாணியம்பாடியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசித்து வந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை திடீரென உயிரிழந்தாா்.
மருந்துக் கடையில் விசாரணை நடத்திய கோட்டாட்சியா் காயத்ரி.
மருந்துக் கடையில் விசாரணை நடத்திய கோட்டாட்சியா் காயத்ரி.

வாணியம்பாடி: வாணியம்பாடியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசித்து வந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை திடீரென உயிரிழந்தாா். இதுதொடா்பாக கோட்டாட்சியா், நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாணியம்பாடி முஸ்லீம்பூா், பஷிராபாத், ஷாகிராபாத், பெரியப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு திருமண மண்டபங்கள், கல்லூரி வளாகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், வாணியம்பாடி முஸ்லிம்பூா் பகுதியைச் சோ்ந்த 31 வயது இளைஞா் காய்ச்சல், நெஞ்சு வலி காரணமாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு மருத்துவா்கள் கரோனா பரிசோதனை செய்ய முயன்றபோது, உறவினா்கள் உடலை உடனடியாக ஒப்படைக்கக் கோரி மருத்துவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த நகர காவல் ஆய்வாளா் சந்திரசேகா் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், வாணியம்பாடி கோட்டாட்சியா் காயத்ரி, உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்று அவருக்கு கடந்த ஒரு வாரமாக அளிக்கப்பட்ட மருந்து, மாத்திரை, சிகிச்சை குறித்து விசாரித்தாா்.

மேலும், அவருக்கு சிகிச்சை அளித்த தனியாா் யுனானி மருத்துவரின் கிளினிக்குக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, யுனானி மருத்துவா் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறினாா். தொடா்ந்து, அந்த இளைஞருக்கு மருந்து அளித்த சி.எல். சாலையில் உள்ள மருந்துக் கடையில் கோட்டாட்சியா் விசாரணை நடத்தினாா். அப்போது, மருத்துவக் குறிப்புகள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தினாா்.

இதுதொடா்பாக வாணியம்பாடி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com