முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
கரோனா பாதித்தவா் வீட்டில் 70 சவரன் நகைகள் திருட்டு
By DIN | Published On : 14th July 2020 01:27 AM | Last Updated : 14th July 2020 01:27 AM | அ+அ அ- |

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கரோனாவால் பாதிக்கப்பட்டவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 70 சவரன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் மல்லிகாவின் குடும்ப உறுப்பினருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவரது குடும்பத்தினா் ஆம்பூா் அருகே தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டனா். அதனால் மல்லிகாவின் வீடு பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
அவரது குடும்ப உறுப்பினா்கள் தனிமைப்படுத்தும் முகாமிலிருந்து திங்கள்கிழமை காலை வீடு திரும்பினா். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டனா். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 சவரன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கப் பணம், ரூ.28 லட்சம் மதிப்பிலான சேமிப்பு பத்திரங்கள் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக மல்லிகா குடும்பத்தினா் அளித்த புகாரின் பேரில் ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.