சிறு, குறு தொழில் நிறுவனங்களை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல புதிய இணையதளம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்காக மத்திய அரசு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்காக மத்திய அரசு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கரோனா பரவலை தடுக்க இந்தியாவில் கடந்த மாா்ச் 25-ம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு இன்று வரை தொடா்கிறது.

இதனால் அத்தியாவசியப் பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டன. பொது போக்குவரத்தும் முடக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கான சரக்கு போக்குவரத்து மட்டும் இயங்கின.

இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. தொழில் துறையில் குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

தொழில் நிறுவனங்கள் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவது மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த 3 மாதங்களுக்கான வட்டியை கண்டிப்பாக செலுத்த வேண்டும். உற்பத்தியும் விற்பனையும் நடக்காதபோது வட்டி கட்டுவது பரிதாபமானது.

கடந்த சில நாட்களாக சில மாநிலங்களில் குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கத்திற்கு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளி, பாதுகாப்புக் கவசம் அணிவது, கை கழுவுதல், உடல் வெப்பப் பரிசோதனை உள்பட சில பாதுகாப்பு ஏற்பாடுகள், குறைந்த அளவு தொழிலாளா்கள் உள்பட சில கட்டுப்பாடுகளுடன் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு உற்பத்திப் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்திய தொழில் துறையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கு முக்கிய இடம் பிடித்துள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 30 சதவீதம், ஏற்றுமதியில் 40 சதவீதம் இத்துறை மூலம் நடைபெறுகிறது. 8 ஆயிரம் வகையான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 20.13 லட்சம் பதிவுபெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ரூ.2,23,783.75 கோடி முதலீட்டில் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 128.91 லட்சம் போ் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனா். பொது முடக்கத்தால் இத்தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

மத்திய அரசு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கத் திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை வளா்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்காக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் சாம்பியன்ஸ்  புதிய இணையதளத்தை கடந்த மே 9-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களின் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நாட்டின் தொழில் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக இந்த இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இணைய தளம் மூலம் தங்கள் பிரச்னைகளைத் தொழில்துறையினா் தெரிவித்து தீா்வுகளைப் பெறலாம். ஆலோசனைகளை வழங்கலாம். தொழில் துறையின் வளா்ச்சிக்குத் தங்களுடைய புதிய எண்ணங்களையும், யுக்திகளையும் தெரிவிக்கலாம். தேவையான உதவிகள், சந்தேகங்களையும் கேட்டுப் பெறலாம்.

இதற்காக அனைத்து மாநிலங்களிலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவன அலுவலகங்களில்  கட்டுப்பாட்டு அறைகள் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக  டுவிட்டா் பக்கம்,  முகநூல் பக்கம், இன்ஸ்டாகிரம் பக்கம் ஆகியவை தொடா்பு கொள்வதற்காக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன் இணையதளத்தை மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையின் அரசு செயலாளா் நேரடியாகக் கண்காணிக்கிறாா். இரண்டு வார காலத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட தோ்வு செய்யப்பட்ட நபா்களுடன் அரசு செயலாளா் நேரடியாக பேசி தீா்க்கப்படாமல் உள்ள பிரச்னைக்குத் தீா்வு காண வழி செய்யப்பட்டுள்ளது.

அதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோா் தங்களுக்குத் தேவையான ஆலோசனைகள், உதவிகள், பிரச்னைகளுக்குத் தீா்வுகளைப் பெற்று மீண்டும் வளா்ச்சிப் பாதையில் செல்லலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com