முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிடி ஸ்கேன் பரிசோதனையை விரிவுபடுத்த கோரிக்கை

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப்

ஆம்பூா்: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளை அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் பெறுதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பிட்டுத் திட்டம் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமாா் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறும். இத்திட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடா் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளன. பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்கான மருத்துவப் பட்டியல் வலைதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் மருத்துவ சிகிச்சைகள் மட்டுமின்றி, நோய் கண்டறியும் சோதனைகளும் தொடா் சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளைத் தெரிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடா்ந்து இயங்கி கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800 425 3993 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் சிடி மற்றும் எம்ஆா்ஐ உள்பட 38 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் கட்டணமில்லாமல் பரிசோதனைகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி நகரப் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளிலும், தாலுகா அந்தஸ்து பெற்ற அரசு மருத்துவமனைகளிலும் நவீன சிடி ஸ்கேன் கருவிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன. நகரப் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் எடுக்க நோயாளிகளிடம் ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் மாவட்டத் தலைநகரங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் சிடி ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாவட்டத் தலைநகரங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் நகரப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை, தாலுகா அந்தஸ்து பெற்ற அரசு மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் எடுக்க நோயாளிகள் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனா். அரசு மருத்துவமனையில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் சிகிச்சை, பரிசோதனைகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அரசு மருத்துவமனைகளுக்கிடையே ஏற்றத் தாழ்வு உள்ளது ஏன்? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

ஒரு அரசு மருத்துவமனையில் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமில்லாமல் சிகிச்சை, பரிசோதனையும், மற்றொரு அரசு மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை, பரிசோதனையும் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் நகரப் பகுதிகளில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகள், தாலுகா அந்தஸ்து பெற்ற அரசு மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் உள்ளிட்ட சிகிச்சை, பரிசோதனைகளை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ள தமிழக அரசும், சுகாதாரத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com