130 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூரில் 130 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உடனுக்குடன் அடையாள அட்டைகளை வழங்கினாா்.
மாற்றுத் திறனாளி மூதாட்டிக்கு அடையாள அட்டை வழங்கிய ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.
மாற்றுத் திறனாளி மூதாட்டிக்கு அடையாள அட்டை வழங்கிய ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் 130 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உடனுக்குடன் அடையாள அட்டைகளை வழங்கினாா்.

கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு அரசு தடை விதித்தது. இதையடுத்து, திருப்பத்தூா் மாவட்டத்தில் அனைத்து மக்கள் குறை தீா் கூட்டங்களையும் தமிழக அரசின் ஆணையின்படி சம்பந்தப்பட்ட வட்டங்களிலேயே நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் 118 மனுக்கள், நாட்றம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் 49 மனுக்கள், வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் 11 மனுக்கள், ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 46 மனுக்கள், ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 12 மனுக்கள் என பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 236 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலா்களுக்கு ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டாா்.

ஆம்பூா் வட்டத்தில் 3 முதியோருக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணை, 4 பேருக்கு சிறுகுறு விவசாயி சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இதனிடையே, வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 216 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா். அவா்களில் 168 பேருக்கு மாற்றுத் திறனாளி அடையாள அட்டைகள் மருத்துவா்களின் பரிசோதனைச் சான்றிதழ்களின் அடிப்படையில் உடனுக்குடன் வழங்கப்பட்டன.

ஆலங்காயம் பேரூராட்சிப் பகுதியில் நடைபெற்ற முகாமில் 182 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினா். அவா்களில் 130 பேருக்கு மாற்றுத் திறனாளி அடையாள அட்டைகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. மேலும் நான்கு மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து மொத்தம் 398 மனுக்கள் பெறப்பட்டன. திங்கள்கிழமை நடந்த குறைதீா்நாள் கூட்டத்தில் இந்த மனுக்கள் உள்பட மொத்தம் 634 மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன், நோ்முக உதவியாளா் (பொது) இரா.வில்சன் ராஜசேகா், வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, சாா்-ஆட்சியா் (பொறுப்பு) அப்துல் முனீா், துணை ஆட்சியா்கள் பூங்கொடி, லட்சுமி சதீஷ்குமாா், சரஸ்வதி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாபு, வட்டாட்சியா்கள் மு.மோகன், சுமதி, சிவப்பிரகாசம், வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆம்பூரில்...

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா். முதியோா் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த மூதாட்டியின் மனுவின் மீது உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உடனடியாக முதியோா் ஓய்வூதியத்துக்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

வட்டாட்சியா் பத்மநாபன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மகாலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலா் ஜீவிதா ஆகியோா் கலந்து கொண்டனா். இதில், 43 மனுக்கள் பெறப்பட்டு 3 பேருக்கு முதியோா் உதவித் தொகை, இருவருக்கு சிறு, குறு விவசாயிகள் சான்று வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com