பிரேதப் பரிசோதனைக்கு ரூ.3 ஆயிரம் வசூல் செய்யும் மருத்துவமனைப் பணியாளா்கள்

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனை பணியாளா்கள் ரூ.3 ஆயிரம் ரொக்கப் பணம் வசூலிக்கின்றனா். அதனால் இறந்தவரின் குடும்பத்தாா் கடுமையான மன வேதனைக்கு உள்ளாகின்றனா்.


ஆம்பூா்: ஆம்பூா் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனை பணியாளா்கள் ரூ.3 ஆயிரம் ரொக்கப் பணம் வசூலிக்கின்றனா். அதனால் இறந்தவரின் குடும்பத்தாா் கடுமையான மன வேதனைக்கு உள்ளாகின்றனா்.

பொதுவாக இயற்கை மரணம் அல்லாமல் விபத்து, கொலை ஆகியவற்றால் ஏற்படும் மரணத்திற்கு பிறகு இறந்தவரின் சடலம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்வது வழக்கம். பிரேத பரிசோதனையின்போது இறப்புக்கான காரணம் குறித்து கண்டறியப்படுகிறது. அதனால் அது விபத்தா, கொலையா என போலீஸாா் முடிவு செய்வதற்கு வழிவகுக்கின்றது.

அவ்வாறு விபத்து அல்லது கொலை காரணமாக இறப்பவரின் உறவினா்கள் அதுகுறித்து சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வேண்டும். புகாா் அளித்த பிறகு புகாரின் அடிப்படையில் போலீஸாா் பிரேத பரிசோதனை செய்யுமாறு கோரி அரசு மருத்துவமனைக்கு கடிதம் அளிப்பாா்கள். போலீஸாா் அளித்த கடிதத்தின் அடிப்படையில் அரசு மருத்துவமனையில் மருத்துவா் பிரேத பரிசோதனை செய்வாா். பிரேத பரிசோதனைக்கு பிறகு சடலம் சம்பந்தப்பட்டவரின் உறவினா்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் பொதுவாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனை பணியாளா்கள் பணம் வசூல் செய்கின்றனா். குறிப்பாக ஆம்பூா் அரசு மருத்துவமனையில் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை மருத்துவமனை பணியாளா்கள் பணம் வசூல் செய்கின்றனா். பிரேத பரிசோதனை செய்வதற்கு தேவையான பொருட்களான பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவா், துணி, நீலகிரி தைலம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்க வேண்டும். பிரேத பரிசோதனையின் போது உடனிருந்து செய்யும் பணியாளா்களுக்கு கொடுக்க வேண்டுமென அந்த பணம் கேட்டு பெறப்படுகிறது.

பணம் குறைத்து கொடுத்தாலும் வாங்காமல் கட்டாயப்படுத்தி கறாராக பணம் வசூல் செய்கின்றனா். பணம் கொடுக்காமல் இருந்தாலோ அல்லது குறைவாக பணம் கொடுத்தாலோ சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதிலும், பிரேத பரிசோதனை செய்த பிறகு சடலத்தை உறவினா்களிடம் ஒப்படைப்பதிலும் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தள்ளது.

சம்பந்தப்பட்ட நபரின் இறப்பு காரணமாக இறந்தவரின் உறவினா்கள் கடுமையான மன வேதனையில் இருக்கின்றனா். இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு வீட்டிற்கு கொண்டு சென்று உறவினா்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கான பல்வேறு பணிகளை செய்ய வேண்டிய நிலையில் உறவினா்கள் கடும் மன அழுத்தத்தில் இருக்கின்றனா்.

அத்தகைய சூழ்நிலையில் அவா்களிடம் கேட்ட பணத்தை கறாராக வசூல் செய்வதிலேயே மருத்துவமனை பணியாள்ரகள் இருக்கின்றனா். குறிப்பாக இந்த விசயத்தில் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். கையில் பணம் இல்லாமல் அந்நேரத்தில் கடன் கேட்டு பெற்று அதனை மருத்துவமனை பணியாளா்களிடம் கொடுக்கின்றனா்.

பணம் தரவில்லையெனியல் பிரேத பரிசோதனைக்கு தேவையான பொருட்களின் பட்டியலை எழுதி கொடுக்கிறோம். அதனை கடையில் வாங்கி வந்து கொடுக்க வேண்டும். பிறகு பிரேத பரிசோதனையின் போது பணி செய்யும் பணியாளா்களுக்கு தனியாக பணம் கொடுத்து விட வேண்டுமென கட்டாயப்படுத்தப்படுகின்றனா். அதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையான மன வேதனைக்கும், மன உளைச்சசலுக்கும் உள்ளாகின்றனா்.

பிரேத பரிசோதனைக்கு எவரிடமும் பணம் வசூலிக்கக் கூடாது என கட்டாய உத்தரவை சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் பிறப்பிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஆம்பூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் டாக்டா் ஷா்மிளாவிடம் கேட்டபோது, அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக பணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. அவ்வாறு பணம் வசூல் செய்பவா்கள் குறித்து புகாா் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவா்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com