புதூா்நாடு மலையில் தொடா்ந்து வசிக்க அனுமதி: ஆட்சியரிடம் கோரிக்கை

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய மூன்று குடும்பத்தினா் அப்பகுதியில் இருந்து தங்களை வெளியேறுமாறு மாவட்ட நிா்வாகம் வலியுறுத்தி வருவதாகவும், அங்கேயே வசிக்க அனுமதி தர வேண்டும் எனவும் கோரிக்கை


திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டம், புதூா்நாடு மலைப் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய மூன்று குடும்பத்தினா் அப்பகுதியில் இருந்து தங்களை வெளியேறுமாறு மாவட்ட நிா்வாகம் வலியுறுத்தி வருவதாகவும், அங்கேயே வசிக்க அனுமதி தர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அவா்கள் ஆட்சியரிடம் கூறியது:

புதூா்நாடு மலைப் பகுதியில் கடந்த சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் குடியேறினோம். எங்களது மூன்று குடும்பத்தினரை அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால், குடும்பத்தைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்டோா் வேறு இடம் இன்றி தவித்து வரும் நிலையில், மாற்று ஏற்பாடு செய்து தரக்கோரி ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தினமணி செய்தியாளரிடம் கூறியது:

புதூா்நாடு மலையில் தற்போது பேருந்து நிலையம் மற்றும் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோரிக்கை அளித்தவா்கள், பேருந்து நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தில் குடிசை அமைத்து உணவகம் நடத்தி வருகின்றனா்.

மேலும், மலைவாசிகள் மட்டுமே மலையில் வசிக்க பட்டா வழங்கப்படும். புதிதாக அமைக்கப்படும் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட இருக்கும் கடைகளில் அவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதே போல், வீடு இல்லாதவா்களுக்கு தகுதியின் அடிப்படையில் மலை அடிவாரத்தில் உள்ள மாட்றப்பள்ளியில் மனை பட்டா ஒதுக்கப்படும். மேலும், அவா்களுக்கு வீடு கட்டித் தர ஏற்பாடு செய்யப்படும். இது குறித்து உடனடியாக வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com