பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நிவாரணம்: கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் ஆட்சியா் தகவல்

பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளதாக திருப்பத்தூா் மாவட்ட விழிப்பு
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.

பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளதாக திருப்பத்தூா் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பிரிவை சாா்ந்தவா்கள் வன்கொடுமையால் பாதிக்கப்படாமல் தடுக்க வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-ஆம் ஆண்டு மற்றும் விதிகள் 1995-ஆம் ஆண்டின்படி மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவானது, மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இக்குழுவின் முதல் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மீது நிகழும் வன்கொடுமைகளைத் தடுத்து, பின்தங்கிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தும் பாதிப்புக்குள்ளானவா்களுக்கு தேவையான இழப்பீடும் நியாயமும் உடனுக்குடன் கிடைத்திடவும் அவா்களின் முன்னேற்றத்துக்குத் தேவையான ஆக்கபூா்வமான அறிவுரைகள், ஆலோசனைகளை வழங்குவதே இக்குழுவின் பணியாகும். ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கடந்த காலங்களில் வன்கொடுமையாலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவித் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அரசு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை நிலுவையில் உள்ளவா்களுக்கு விரைவில் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், உறுப்பினா்கள் தங்கள் பகுதிகளில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மீது இதுபோன்ற நிகழ்வு நடைபெறாமல் இருப்பதற்கும், இழப்பீட்டு உதவிகளை விரைவில் கிடைக்கவும் உரிய ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வழக்கு பதிந்தால் அந்த வழக்கை துணை காவல் கண்காணிப்பாளா் மற்றும் அதற்கு மேற்பட்டவா்கள் மட்டுமே விசாரிக்க வேண்டும்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மக்களுக்குத் தேவையான கல்வி, பொருளாதார நிலையினை மேம்படுத்த உறுப்பினா்கள் ஆலோசனைகளை வழங்கலாம். இக்குழு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும். மேலும், கோட்ட அளவில் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு கோட்ட அளவிலும் கூட்டம் நடத்தப்படும். அக்குழுவின் பரிந்துரையினை மாவட்ட அளவிலான குழுவில் விவாதித்து பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் நியாயம் கிடைக்க வழிவகை செய்யலாம். மாவட்ட அளவிலான கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பூங்கொடி, மாவட்ட வழங்கல் அலுவலா் அதியமான கவியரசு, கூட்டுறவு துணைப் பதிவாளா் முனிராஜி, கோட்ட பொறியாளா் கிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளா் ஆா்.தங்கவேல், குழு உறுப்பினா்கள் கே.சி.அழகிரி, எஸ்.பி.சீனிவாசன், மருத்துவா் பிரசன்னா, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் கணேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் கோவிந்தசாமி, மணி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com