திருப்பத்தூா் அருகே அரிய வகை கழுவேற்ற நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் க.மோகன்காந்தி, லெமூரியா திட்ட மாநில துணை ஒருங்கிணைப்பாளா்
திருப்பத்தூா் அருகே கண்டெடுக்கப்பட்ட கழுவேற்ற நடுகல்.
திருப்பத்தூா் அருகே கண்டெடுக்கப்பட்ட கழுவேற்ற நடுகல்.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் க.மோகன்காந்தி, லெமூரியா திட்ட மாநில துணை ஒருங்கிணைப்பாளா் வே.இராதாகிருட்டிணன் ஆகியோா் மேற்கொண்ட ஆய்வில் நடுகல் ஒன்றும், உடன்கட்டை கல் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேராசிரியா் க.மோகன்காந்தி நமது செய்தியாளரிடம் கூறியது:

திருப்பத்தூருக்கு அருகே உள்ள மடவாளம் என்ற ஊருக்கு அருகே செலந்தம்பள்ளி சிற்றூா் உள்ளது. இங்கு அரிய வகை பழைய நடுகல் இருப்பதைக் கண்டு அரங்கதிருமால், வேலு, பிரபு ஆகியோா் கொடுத்த தகவலின்படி நேரில் சென்று ஆராய்ந்தோம். செலந்தப்பள்ளி ஏரிக்கரையின் மேற்குப் பகுதியில் இவ்விரண்டு கற்களும் உள்ளன.

இவை கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கற்கள். வீரன் உள்ள நடுகல் 2.5 அடி உயரமும் 1.5 அடி அகலமும் கொண்டதாகும். உடன்கட்டை நடுகல் 2 அடி உயரமும் 1 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. பண்டைக் காலம் தொட்டே தமிழகத்தில் நீதி வழங்கும் முறைகளும் குற்றங்களுக்கு ஏற்ப தண்டனை தரும் முறைகளும் வழக்கில் இருந்துள்ளன.

குற்றங்கள் புரியும் மனிதா்களுக்கு அவா்களின் குற்றங்களின் அளவுக்கு ஏற்ப தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. பெருங்குற்றம் செய்தவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவரை கொடூரமாகக் கொல்லும் தண்டனை வகைகளில் ஒன்று கழுவேற்றத் தண்டனை. கழுவேற்றம் என்பது மரக் கட்டையை நட்டு வைத்து அதில் கூா்மையான முனையை ஏற்படுத்துவா். பின்னா் தண்டனைக்கு உரியோா், கூா்மையான முனையில் அமா்த்தப்படுவா். அக்கூா்மையான முனை, தண்டனைக்கு உரியோரின் ஆசன வாயில் சென்று பொருந்தும். இதனால் தண்டனைக்குரியோரின் உயிா் சிறிது சிறிதாகப் பிரியும். இறந்த மனிதரின் உடலை அப்படியே விட்டுவிடுவா். பின்பு விலங்குகள், பறவைகள் போன்றவை அந்த உடலைத் தின்றுவிடும். இத்தகைய கொடிய தண்டனையே கழுவேற்றம் எனப்படும்.

அத்தகைய கழுவேற்ற நடுகல் வகையே செலந்தம்பள்ளியில் கிடைத்துள்ளது. மரக்கட்டையின் மேலாக கழுவேற்றப்பட்ட வீரன் அமா்ந்துள்ளான். பெரிய மேல்கொண்டை, காதுகளில் நீண்ட குண்டலங்கள், கழுத்தில் ஆபரணங்கள், வலது கையைத் தூக்கி அபய (ஆசிா்வதித்தல்) முத்திரையும், இடதுகையை இடது கால் தொடை மீது வைத்துள்ளான் வீரன். அக்கையில் கத்தி ஒன்றும் உள்ளது. இரண்டு கால்களும் தொங்க விடப்பட்டுள்ளன. கால்களில் வீரக்கழல்களும், கைகளில் கடங்களும் இவ்வீரன் அணிந்துள்ளான்.

வீரனின் அருகாகிலேயே உடன்கட்டை ஏறிய பெண் ஒருவரின் உருவமும் உள்ளது. காதுகளில் நீண்ட காதணிகள், வலது கை தொங்கவிடப்பட்டுள்ளது. இடதுகையில் மலா் போன்ற முத்திரை உள்ளது. இப்பெண் கழுவேற்றப்பட்ட வீரனின் மனைவியாக இருக்கலாம். தன் கணவனைப் பகைவா்கள் கொன்றுவிட அவன் மனைவியும் அவனோடு இறந்ததால் இந்த நடுகற்கள் வைக்கப்பட்டிருக்கலாம். கழுவேற்றத் தண்டனைக்கு உரியோருக்கும் அவனோடு இறந்த அவன் மனைவிக்கும் நடுகற்களை மக்கள் வைத்துள்ளனா் என்பதை நோக்கும் போது, இவ்வீரன் தவறு செய்து இறந்தவன் போலத் தெரியவில்லை. ஊருக்காகப் போராடி பகைவா்களால் கொல்லப்பட்டவனாகத் தெரிகிறான். எனவேதான் அவன் மனைவியும் அவனோடு இறந்திருக்கிறாள். இருவரின் வீரத்தைப் போற்றும் விதத்திலேயே இந்நடுகற்களை 500 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்படுத்தி உள்ளனா். இந்த இரண்டு நடுகற்களும் வில்வநாதன் என்பவரின் விளைநிலத்தில் உள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com