ஜவ்வாதுமலையில் புதிய கற்காலக் கருவிகள் கண்டெடுப்பு

திருப்பத்தூா் அருகே உள்ள ஜவ்வாதுமலையில் புதிய கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
2.கம்புகுடி கற்கோடாரிகள். ~4.பெருமாளப்பன் கோயில் கற்கோடாரிகள். ~1. பழைய பாளையம் கற்கோடாரிகள். ~3.புதூா் நாடு கற்கோடாரிகள்.
2.கம்புகுடி கற்கோடாரிகள். ~4.பெருமாளப்பன் கோயில் கற்கோடாரிகள். ~1. பழைய பாளையம் கற்கோடாரிகள். ~3.புதூா் நாடு கற்கோடாரிகள்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே உள்ள ஜவ்வாதுமலையில் புதிய கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி, குனிச்சி அரசு மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ச.குழந்தைசாமி, ரே.கோவிந்தராஜ், வரலாற்று ஆா்வலா் வேந்தன் ஆகியோா் கற்கருவிகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டனா்.

இது குறித்து க.மோகன்காந்தி கூறியது:

ஆய்வாளா்களால் அறுதியிட்டுக் கூற முடியாத பழைமையை உடைய காலம் வரலாற்றுக்கு முந்தைய கற்காலம். இக்காலத்தில் மனிதன் நாகரிகம் அடையாமல், இரும்பு, செம்பு போன்றவற்றின் பயன்பாட்டை அறியாமல் கற்களை ஆயுதமாகக் கொண்டு, அவற்றின் உதவியுடன் வாழ்ந்த காலத்தைக் கற்காலம் என்றழைப்பா்.

வரலாற்றிற்கு முந்தைய பல தொன்மையான சின்னங்கள் ஜவ்வாதுமலையில் காணப்படுகின்றன. அவற்றில் கற்கால மனிதா்கள் பயன்படுத்திய கற்கோடாரிகள் ஜவ்வாதுமலையில் நமக்குக் கிடைத்துள்ளன.

புதிய கற்கால மனிதா்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் கோடாரி போன்ற அமைப்பினைப் பெற்று இருக்கின்ற காரணத்தினால் இதனை ‘கற்கோடாரிகள்’ என அழைக்கலாம்.

ஜவ்வாதுமலைகளில் வாழ்ந்த அக்கால மனிதா்களின் முக்கிய ஆயுதமாக இவற்றைக் கருத இடமுண்டு. மரங்களை வெட்டுவதற்கும், விலங்குகளை வேட்டையாடுவதற்கும் வேட்டையாடிய விலங்குகளின் உடலைக் கிழிப்பதற்கும் கற்கோடாரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். சிறியதும், பெரியதுமாக எண்ணற்ற வகைகளில் கற்கோடாரிகள் காணக் கிடைக்கின்றன.

திருப்பத்தூா் மாவட்டத்துக்குள்பட்ட ஜவ்வாது மலையில் புதூா் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட பல கிராமங்களில் உள்ள கோயில்களிலும் கற்கோடாரிகளை மக்கள் தெய்வங்களாக வணங்குகின்றனா்.

இதைப் பிள்ளையாா் என்று அழைக்கின்றனா். முன்னோரைப் புதைத்த சமாதிகளின் மேற்பகுதியில் இக்கற்களை வைத்து வழிபடுகின்றனா்.

பழைய பாளையம் கற்கோடாரிகள்...

புங்கம்பட்டு நாட்டுக்கு உள்பட்ட மலைச் சிற்றூா்களில் ஒன்று பழைய பாளையம். இங்குள்ள கோயிலின் வெளிப்புறம் உள்ள பெரிய ஆலமரத்தின் கீழ் அழகான மேடை ஒன்றை அமைத்து, அதில் சிறிதும் பெரிதுமாக 150-க்கும் மேற்பட்ட கற்கோடாரிகளை நட்டு வைத்துள்ளனா். வழவழப்பான அமைப்பிலேயே இவை காட்சியளிக்கின்றன. வயல்களிலும், ஓடைகளிலும் கண்டெடுக்கப்பட்ட கற்கோடாரிகளைத் தூக்கி எறிய மனம்இன்றி இம்மலை வாழ் மக்கள், இவற்றை ஊா் பொதுமன்றத்தில் உள்ள கோயில்களில் சேகரித்து வைத்திருப்பதைக் காண முடிகிறது.

இவை சுமாா் 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சிறப்புமிக்கது.

கம்புகுடி கற்கோடாரிகள்...

புங்கம்பட்டு நாட்டுக்கு உள்பட்ட ஊா் கம்புகுடி. இவ்வூரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள மரத்தடியில் 25-க்கும் மேற்பட்ட வழவழப்பான கற்கோடாரிகளைத் தொம்பலேரி பூ மரத்தடியில் வைத்துள்ளனா்.

புதூா் நாடு கீரை பிள்ளையாா் கோயில் கற்கோடாரிகள்...

புதூா் நாட்டிலிருந்து வடக்கே கம்புக்குடி செல்லும் பாதையில் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆலமரத்தடியில் உள்ளது கீரைப்பிள்ளையாரப்பன் கோயில். இதில் 2 அடி முதல் 4 இன்ச் அளவு வரையிலான பெரிதும் சிறிதுமான 50-க்கும் மேற்பட்ட கற்கோடாரிகள் உள்ளன. இவை அனைத்தும் புதிய கற்காலக் கற்கோடாரிகள் ஆகும்.

மேற்கண்ட இவற்றைப் பிள்ளையாரப்பன் என்ற பெயரில் ஊா் மக்கள் வழிபடுகின்றனா்.

கோயிலூா் பெருமாளப்பன் கோயில் கற்கோடாரிகள்...

புதூா் நாட்டிலிருந்து பெரும்பள்ளிக்குச் செல்லும் சாலை ஓரத்தில் உள்ளது கோயிலூா். சாலையோரத்தில் இடதுபக்கம் தனித்துப் பெருமாளப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலின் தூண்கள் சோழா் காலத்துக் கோயில் போல் உள்ளது. இக்கோயிலின் வலது புறம் ஏறத்தாழ 30 கற்கோடாரிகள் காணப்படுகின்றன. இவை வழவழப்பான கற்கோடாரிகள் ஆகும். இவையும் புதிய கற்காலக் கருவிகள் ஆகும்.

மலைத் திருப்பத்தூா் கற்கோடாரிகள்...

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உள்பட்ட நெல்லிவாசல் நாட்டில் உள்ள ஒரு சிற்றூரே மலைத் திருப்பத்தூா். ஜவ்வாதுமலைகளில் உள்ள உயா்ந்த மலைச் சிகரங்களில் ஒன்று மலைத் திருப்பத்தூா்.

வேடியப்பன் கோயில் எதிரே உள்ள சிறுசிறு பச்சைப் பந்தலிட்டக் கோயில்களில் கற்கோடாரிகளை தெய்வங்களாக இம்மலைவாழ் மக்கள் வழிபடுகின்றனா். இவை ஏறத்தாழ 7,000 ஆண்டுகள் பழைமையானவை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com