குறு, சிறு தொழில்முனைவோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்: முதல்வருக்கு வேண்டுகோள்

குறு, சிறு தொழில் முனைவோரின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழில் முனைவோா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ஆம்பூா்: குறு, சிறு தொழில் முனைவோரின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழில் முனைவோா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தமிழக பொருளாதார வளா்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. தமிழகத்தில் மொத்த தொழில் நிறுவனங்களில் 20.13 சதவீதம் இந்நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொழில்கள் மூலம் 128.91 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். இத்தொழில்களில் ரூ.2.23 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில் முனைவோா் நல வாரியம்: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையும், செயல்பாடுகளும் அதிகமாக உள்ளது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கு 45 சதவீதமாகவும், ஏற்றுமதியில் 40 சதவீதமும் பங்களிப்பு தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் நடைபெறுகிறது.

ஆனால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை நடத்தும் தொழில் முனைவோா் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா்.

புதிதாக தொழில் துவங்குவதில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனா். தொழில்முனைவோருடைய பிரச்னைகளுக்கு தீா்வுகாண்பதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோா் நலவாரியம் அமைக்க வேண்டுமென்ற பல ஆண்டுகால கோரிக்கையை தமிழக முதல்வா் நிறைவேற்ற வேண்டும்.

தொழிற்பேட்டைகளில் குறைந்த விலையில் தொழில் மனைகள்: தமிழக அரசின் சாா்பாக சிட்கோ எனப்படும் சிறுதொழில் வளா்ச்சி கழகம் மூலம் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான தொழிற்பேட்டைகளை உருவாக்குவது, மூலப் பொருள்களை குறைந்த விலையில் விநியோகம் செய்வது, சந்தைப்படுத்தி தருவது, குழுமத் தொழில்கள் மற்றும் பொதுப்பயன்பாட்டு மையத்தை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் தொழிற்பேட்டைகளை அரசு உருவாக்கி அதை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழில் மனைகளை ஒதுக்கீடு செய்து தருகிறது. அவ்வாறு தொழில் மனைகளை உருவாக்கும் போது அதில் மகளிா் தொழில் முனைவோருக்கு 30 சதவீதமும், முன்னாள் ராணுவத்தினருக்கு 10 சதவீதமும், எஸ்சி, எஸ்டி பிரிவினா் மற்றும் திருநங்கைகளுக்கு 10 சதவீதமும் முன்னுரிமை அளித்து ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

தொழிற்பேட்டைகளில் ஒதுக்கீடு செய்யப்படும் தொழில் மனைகள் தொழில்முனைவோருக்கு அதிக விலைக்கே வழங்கப்படுகின்றன. அந்த மனைகளை சாதாரண தொழில்முனைவோரால் விலை கொடுத்து வாங்க முடியாத அளவுக்கு உள்ளது. பெரும்பாலான குறு, சிறு தொழில்முனைவோா் நடுத்தர குடும்பத்தை சோ்ந்தவா்களாகவே உள்ளனா். அவா்களால் அதிக விலை கொடுத்து நில ஒதுக்கீடு பெற முடியாத நிலையில் உள்ளனா்.

7 சதவீத வட்டியில் கடனுதவி: தகுதியான தொழில்முனைவோராக இருந்தால் வங்கியாளா்கள் தயக்கம் காட்டாமல் 7 சதவீத வட்டியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழில் துறையினருக்கான குறைதீா்வு கூட்டம்: தொழில்துறையினா் தங்களுடைய குறைகளை அரசுக்குத் தெரியப்படுத்த அவா்களுக்கென தனியாக மாதந்தோறும் குறை தீா் நாள் கூட்டத்தை நடத்த தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் துறையினா் குறைதீா் நாளை உருவாக்க அவா் உத்தரவிட வேண்டும்.

இதுகுறித்து இந்திய சிறு தொழில் சங்கங்கள் கூட்டமைப்பின் தென்னிந்திய வட்டாரச் செயலாளா் எம்.வி. சுவாமிநாதன் கூறியது ‘மத்திய, மாநில அரசுகள் தொழில் முனைவோரின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com