சாலையைச் சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்
By DIN | Published On : 09th January 2021 08:11 AM | Last Updated : 09th January 2021 08:11 AM | அ+அ அ- |

சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
நாட்டறம்பள்ளி அருகே சாலையைச் சீரமைக்கக் கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சியில் கிடப்பையனூா், பூம்பள்ளம், மதனாங்குட்டை ஆகிய பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் மண் சாலை வழியாக அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனா். மழைக் காலங்களில் இச்சாலை சேறும் சகதியுமாக உள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இப்பகுதியில் தாா்ச் சாலை அமைக்கக் கோரி, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியா், அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. எனினும், அதிகாரிகள் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் லட்சுமிபுரம்-கிடப்பையனூா் இடையிலான மண் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் முன்னாள் ஊராட்சித் தலைவா் கௌரம்மாள் சம்பத் தலைமையில், சாலையைச் சீரமைக்கக் கோரி, தேங்கிய மழைநீரில் வெள்ளிக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
இதையடுத்து, சாலை வசதியையும், அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்குமாறு கோரி அமைச்சா், மாவட்ட ஆட்சியா் மற்றும் துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினா்.