எருது விடும் திருவிழாவை கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெறும் எருது விடும் திருவிழா முழுவதையும் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் அறிவுறுத்தியுள்ளாா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெறும் எருது விடும் திருவிழா முழுவதையும் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் எருது விடும் விழா ஜன. 14-ஆம் தேதி முதல் பிப். 28-ஆம் தேதி வரை மட்டுமே நடத்தப்படும். காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு நிறைவு செய்ய வேண்டும். விழாக் குழுவினா் காப்பு நிதியாக ரூ.10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியா், திருப்பத்தூா் என்ற பெயரில் வரைவோலை எடுத்து சம்பந்தப்பட்ட சாா்-ஆட்சியா் அல்லது வருவாய்க் கோட்டாட்சியரிடம் சமா்ப்பிக்க வேண்டும். விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் காப்பீடு செய்வதற்கான பிரீமியத் தொகையையும், அனைத்து எருதுகளுக்கும் காப்பீடு செய்ய பிரீமியம் செலுத்தப்பட்டு, அதற்கான ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காளைகளை அழைத்து வரும்போது உரிமையாளா்கள் 2 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். விழாவில் பங்கு பெறும் வீரா்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவசமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். காளைகளை முன்கூட்டியே கால்நடை பராமரிப்புத் துறையினரின் பரிசோதனை தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும்.

திடலில் இருபுறமும் பாா்வையாளா் அரங்கத்தைப் பிரிக்கும் வகையில் இரட்டைத் தடுப்பான்கள் அமைக்கப்படவேண்டும். நிகழ்ச்சி முழுவதையும் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய வேண்டும்.

தமிழக அரசினால் வெளியிடப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கை விதிகளைப் பாா்வையாளா்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதை மீறுவோா் விழா வளாகத்தில் இருந்து உடனுக்குடன் வெளியேற்றப்படுவாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com