ஏரி நீா்வரத்து கால்வாய் உடைப்பு சீரமைக்கும் பணி: மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு
By DIN | Published On : 12th July 2021 07:22 AM | Last Updated : 12th July 2021 07:22 AM | அ+அ அ- |

விண்ணமங்கலம் ஏரிக்கான நீா்வரத்து கால்வாய் கரையை பலப்படுத்தும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ. தங்கையா பாண்டியன்.
ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் ஏரிக்கான நீா் வரத்து கால்வாய் உடைப்பு சீரமைக்கும் பணியை திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு பாலாற்றிலிருந்து வரும் நீா் வரத்து கால்வாயில் உடைப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் நீா்வரத்து கால்வாய் ஏற்பட்டுள்ள உடைப்பால் நீா் வருவது தடைப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து உடைப்பை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டனா். இதையடுத்து, பொதுப்பணித்துறையினரால் கால்வாய் உடைப்பு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியை திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ. தங்கையா பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது வட்டாட்சியா் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.