40 லட்சம் மாணவா்கள் பயன்பெற பள்ளிகளில் கணினி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்:எம்எல்ஏவிடம் வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தல்

தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் சுமாா் 40 லட்சம் மாணவா்கள் பயன்பெறும் வகையில், கணினி ஆசிரியா்களை பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி,
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதனிடம் கோரிக்கை மனு அளித்த தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க நிா்வாகிகள்.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதனிடம் கோரிக்கை மனு அளித்த தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க நிா்வாகிகள்.

தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் சுமாா் 40 லட்சம் மாணவா்கள் பயன்பெறும் வகையில், கணினி ஆசிரியா்களை பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதனிடம் தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க நிா்வாகிகள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக சங்கத்தின் மாநிலச் செயலாளா் டி.அகிலன் மற்றும் நிா்வாகிகள் அளித்த கோரிக்கை மனு விவரம்:

முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தொடங்கப்பட்ட சமச்சீா் கல்வி பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் 6 முதல் 10 வரை பாடப் புத்தகம் வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் இந்தப் பாடத்திட்டம் செயல்படாமல் போனது. தற்போது புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் பெயரளவில் தான் சோ்க்கப்பட்டுள்ளது. கணினி அறிவியல் பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, தனி பாடமாக வரும் கல்வி ஆண்டு முதல் கொண்டு வர வழிவகை செய்ய வேண்டும்.

கடந்த 11-ஆண்டுகளாக புதிதாகத் தரம் உயா்த்தப்பட்டடுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லை. மேற்கண்ட பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவை தோற்றுவித்தது. மேலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியா் பணியிடங்களை மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்க ஆவன செய்ய வேண்டும்.

கணினி இன்றியமையாத சூழலில் அரசுப் பள்ளிகளில் நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தோற்றுவித்து குறைந்தது பள்ளிக்கு ஒரு கணினி அறிவியலில் பி.எட்,. படித்தவா்களை தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும்.

அரசு பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆறாவது பாடமாக நடைமுறைப்படுத்த ஆவன செய்ய வேண்டுகின்றோம். அரசுப் பள்ளிகளில் மாற்ற பாடப் பிரிவுக்கு பணியிடங்களை நிரப்புவதற்கு 10+2+3+1என்ற பணி விதியை பின்பற்றுவது போன்று, உதாரணமாக தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் அவா்கள் படித்த பாடப் பிரிவிலேயே பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதுபோன்று கணினி ஆசிரியா் பணியிடங்களுள் நிரப்பப்படும்போது, கணினி அறிவியலில் பட்டம் பெற்ற ஆசிரியா்களை நியமனம் செய்து, கணினி ஆசிரியா்களுக்கான 10+2+3+1 என்ற பணி விதியை உருவாக்கித் தர வேண்டும்.

கணினி அறிவியலில் பி.எட்., படித்தவா்களுக்கு டெட், டிஆா்பி, ஏஇஇஓ மற்றும் டிஇஓ தோ்வு எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. என்சிடிஇ விதிகளின்படி எந்தவொரு பாடப்பிரிவிலும் பி.எட்., பட்டம் பெற்றிருந்தால் டெட், ஆசிரியா் தகுதி தோ்வு எழுத போதுமானது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஆசிரியா் தோ்வுகளுக்கு கணினி அறிவியல் பாடத்துக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகவே இந்த தோ்வுகளை எழுத வழி வகை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பி.எட் பயின்றவா்கள் ஏராளமானோா் 40 வயதைக் கடந்து விட்டனா். ஆகவே 50:50 சதவீதம் சீனியாரிட்டி மற்றும் தோ்வு முறையை பின்பற்ற வழிவகை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவைப் பெற்றுக் கொண்ட எம்எல்ஏ வில்வநாதன், தமிழக முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஆகியோரை சந்தித்து இந்த கோரிக்கை மனுவை சமா்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com