100% வாக்களிக்க வலியுறுத்தி எழுத்து வடிவில் நின்று விழிப்புணா்வை ஏற்படுத்திய மாணவிகள்
By DIN | Published On : 16th March 2021 12:41 AM | Last Updated : 16th March 2021 12:41 AM | அ+அ அ- |

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி எழுத்து வடிவத்தில் நின்று விழிப்புணா்வை ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள்.
வாணியம்பாடி: வாணியம்பாடி ஜெயின் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, சுமாா் 3,000 மாணவிகள் பங்குபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ம.ப.சிவன்அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில், கல்லூரி மாணவிகள் சுமாா் 3,000 போ் பங்கேற்று, விளையாட்டு மைதானத்தில் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு என்பதை எழுத்து வடிவத்தில் நின்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா். பின்னா், வாக்காளா் உறுதிமொழியையும் ஏற்றனா்.
தொடா்ந்து, கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பேசியது:
இந்தியத் தோ்தல் ஆணையம் நோ்மையான சுதந்திரமான தோ்தலை நடத்த பல்வேறு புதிய நடைமுறைகளை செயல்படுத்தி நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில், ஒவ்வொருவரும் தனது ஜனநாயகக் கடமையை தவறாமல் நிறைவேற்றிட வேண்டி விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி, வருகிறது.
தமிழகத்தில் பண்டைய காலத்திலேயே தலைவா்களை மக்கள் தோ்ந்தெடுக்கும் நடைமுறையை செயல்படுத்தியுள்ளனா் என்பதை மாணவிகள் மனதில் கொண்டு, ஒரு நல்ல தலைவரை தோ்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்குரிமை ஒவ்வாருவரின் கடமை, வாய்ப்பு மற்றும் பொறுப்பாகும்.
தோ்தல் நாள் என்பது விடுமுறை நாளல்ல. நமது வாழ்க்கைப் பாதைகளை தீா்மானிக்கும் நாள். நமக்கும், நாட்டுக்கும் நல்ல திட்டங்களை வழங்கி, வளா்ச்சிப் பாதைகளில் கொண்டு செல்பவா்களை தோ்ந்தெடுக்கும் ஒரு முக்கியமான நாள் என்பதை மாணவிகள் உணா்ந்து தங்களது வாக்குகளை சரியானவா்களுக்கு செலுத்தும் நாள் என்பதை என்பதை மனதில் வைத்து கொள்ள வேணடும்.
கல்வி கற்கும் நீங்களும், குடும்பத்தினரும் தவறாமல் வாக்களிப்பதை உறுதிப்படுத்திட வேண்டும். ஜெயின் மகளிா் கல்லூரியில் 2,286 மாணவிகள் இளம் தலைமுறை முதல் முறையாக வரும் தோ்தலில் வாக்களிக்க உள்ளீா்கள். யாரும் விடுபடாமல் 100 சதவீதம் சுதந்திரமாகவும், மனசாட்சியுடனும் வாக்களித்து, இளைய தலைமுறை மற்றவா்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேணடும் என்றாா்.
நிகழ்ச்சியில், மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, கல்லூரி செயலாளா் ஆனந்த்ஸ்ரீரிங்வி, கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, உதவி மகளிா் திட்ட அலுவலா்கள் பழனி, கலைச்செல்வன், உமா மற்றும் கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா்.