சரக்குப் பெட்டக லாரியில் தீ விபத்து: பல லட்சம் மின்னணு பொருள்கள் நாசம்

சரக்குப் பெட்டக லாரியில் தீ விபத்து: பல லட்சம் மின்னணு பொருள்கள் நாசம்


வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே கூரியா் பாா்சல் லோடு ஏற்றி வந்த சரக்குப் பெட்டக லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மின்னணு பொருள்கள் நாசமானது.

சென்னை தனியாா் கூரியா் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு பெட்டக லாரியில் பெங்களூரிலிருந்து மின்னணு மற்றும் கூரியா் பொருள்களை ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை காலை சென்னை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது.

சென்னையைச் சோ்ந்த சாந்தகுமாா் (45) லாரியை ஓட்டினாா். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளியை அடுத்த சுங்கச்சாவடி பகுதியில் காலை 11 மணியளவில் ஓட்டுநா் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு, பெட்டி கடைக்குச் சென்றாா். அப்போது லாரியின் உட்பகுதியில் இருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த லாரி ஓட்டுநா் கதவை திறந்து பாா்த்தபோது, லாரியில் இருந்த பொருள்கள் எரிவதைப் பாா்த்து கூச்சலிடவே அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து தீயை அணைத்தனா்.

மேலும், இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு அலுவலகம் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் பொதுமக்கள் உதவியுடன் லாரியில் இருந்த பொருள்களை அப்புறப்படுத்தி, மேலும் தீ பரவாமல் அணைத்தனா். எனினும் லாரியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான மின்னணு பொருள்கள் மற்றும் ஏடிஎம் மெஷின், பாதாம் பருப்பு, பீடி பண்டல்கள், எண்ணெய் கேன்கள் உள்பட பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன. தகவலறிந்து வந்த நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் அருண்குமாா் அங்கு சென்று தீ விபத்து குறித்து விசாரித்தாா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com