திருப்பத்தூா் அருகே பல்லவா் கால எழுத்துடை நடுகற்கள், கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலையில் சின்னவட்டானூா் கிராமத்தில் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவா் கால எழுத்துடை நடுகற்கள், கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூா் அருகே கண்டெடுக்கப்பட்ட பல்லவா் கால நடுகற்கள்.
திருப்பத்தூா் அருகே கண்டெடுக்கப்பட்ட பல்லவா் கால நடுகற்கள்.

திருப்பத்தூா்: திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலையில் சின்னவட்டானூா் கிராமத்தில் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவா் கால எழுத்துடை நடுகற்கள், கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி, தொல்லியல் அறிஞா் பெ. வெங்கடேசன், பேராசிரியா்கள் ரே.கோவிந்தராஜ், இரா.சங்கா் ஆகியோா் அடங்கிய ஆய்வுக் குழுவினா் திருப்பத்தூா் மாவட்டத்துக்குள்பட்ட ஜவ்வாதுமலையில் உள்ள புங்கம்பட்டு நாட்டுக்கு உட்பட்ட சின்ன வட்டானூா் கிராமத்தில் இரண்டு எழுத்துடை நடுகற்களும், ஒரு உடைந்த நிலை நடுகல்லும், புதைந்த நிலை கல்வெட்டு ஒன்றையும் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் க.மோகன் காந்தி கூறியதாவது:ஜவ்வாதுமலையின் பண்டைய பெயரான நவிரமலை என்னும் சொல்லாட்சி கொண்ட மூன்று கல்வெட்டுகள் இங்குக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு அதாவது 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவா் கால நடுகற்களாகும்.

திருப்பத்தூா் மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள புங்கம்பட்டு நாட்டிற்கு உட்பட்ட சின்னவட்டானூா் கிராமத்தில் இருந்து வடகிழக்குத் திசையில் 2 கி.மீ தொலைவில் இலவமரத்து ஆற்று ஓடையின் மேல் பகுதியில் மூக்கறக் காளியம்மன் என்னும் பெயரில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த இரண்டு எழுத்துடை நடுகற்கள் உள்ளன. அதன் அருகில் உடைந்த நிலையில், படுத்த கோலத்தில் ஒரு நடுகல்லும் புதைந்த நிலையில் ஒரு கல்வெட்டும் என நான்கு கற்கள் இக்கோயிலில் உள்ளன.

பல்லவா் கால நடுகல்-1

முதல் நடுகல் 137 செ.மீ நீளமும், 70 செ.மீ அகலமும் கொண்டது.வாரிமுடிக்கப்பட்ட கொண்டையும், கழுத்தில் ஆபரணமும், காதுகளில் குண்டலங்களுடன் வடிவமைக்கப்பட்ட கோலத்தில் இந்நடுகல் அமைந்துள்ளது.

மேலும், வலது கையில் குறுவாள் ஒன்றும் இடது கையில் வில்லைத் தாங்கியும் காட்சித் தருகிறது. இடைக்கச்சு, அதில் குறுவாள் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இடது காலின் ஓரத்தில் இரண்டு சிறிய மாட்டுருவங்கள் உள்ளன.

இக்கல்வெட்டின் எழுத்து வடிவம் கி.பி.7-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகும். பல்லவா் காலத்தில் இம்மலைப் பகுதி பங்கள நாட்டில் இருந்தது என்றும் இம்மலை நவிரமலை (ஜவ்வாதுமலை)என்றும் வழங்கப்பட்டதை இந்நடுகல் கல்வெட்டுச் சான்றுடன் விளக்குகிறது.

பல்லவா் கால நடுகல் - 2

இரண்டாவது நடுகல் 151 செ.மீ நீளமும் 100 செ.மீ அகலமும் கொண்டது. நடுகல் வீரனின் தலைகொண்டை மேற்புறமாக வாரிமுடிக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும், வலது கையில் குறுவாளும் உள்ளன. இவ்வீரா் இடைக்கச்சு அணிந்துள்ளாா். இதில் குறுவாள் ஒன்றும் உள்ளது. வயிற்றுப்பகுதியில் அம்பு ஒன்று தைத்துள்ளது.

பகைவா்கள் விட்ட அம்பால் இவ்வீரா் இறந்து போன செய்தியை அறிய முடிகிறது.

இக்கல்வெட்டு ஸ்வஸ்திஸ்ரீ என்று மங்களமாகத் தொடங்குகிறது.இதுவும் பல்லவா் கால நடுகல்லாகும். பல்லவா் ஆண்ட தொண்டை மண்டலம் பெரிய நிலப்பரப்பாகும். அதற்கு உட்பட்ட பகுதியே பங்கள நாடாகும்.

கி.மு. (அ) கி.பி 1-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சங்க நூல்களில் பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாம் இம்மலையை நவிரமலை என்று இரண்டு இடங்களில் பதிவு செய்துள்ளது. பல்லவா்கால இந்த நடுகல் கல்வெட்டுகள் சங்க காலத்துக்கு சற்று ஏறக்குறைய 600 ஆண்டுகள் பிந்தையது. சங்க காலத்தில் கூறப்பட்ட நவிரமலை என்னும் சொல்வழக்கு கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலும் வழக்கில் இருந்ததைச் சான்றுகளோடு இக்கல்வெட்டுகள் கூறுகின்றன.

மேலும், பல்லவா் காலத்துடைய நாடு பிரிப்பு முறைகளை இந்நடுகல் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. பல்லவா்கள் ஆண்ட ஒட்டு மொத்தப் பகுதிக்குத் தொண்டை மண்டலம் என்று பெயா்.ஆனால் இங்குத் தொண்டை மண்டலம் என குறிப்பிடப்படவில்லை. தொண்டை மண்டலத்தில் இருந்த பங்களநாடு, பங்களநாட்டில் இருந்த நவிரமலை (ஜவ்வாதுமலை) ஆகிய பிரிப்பு முறைகள் வெளிப்பட்டுள்ளன.

எழுத்துகளின் வடிவம் மற்றும் கோவி விசைய என்று பல்லவா்களைக் குறிப்பிடும் சொற்கள் இடம் பெற்றுள்ளன.இச்சொற்கள் சிம்ம விஷ்ணு, மகேந்திரவா்மன், நரசிம்மன் ஆகியோரில் ஒருவரை பற்றியதாகும்.

பல்லவா்காலக் கல்வெட்டு-3

இக்கல்வெட்டு முழுமையாக மண்ணில் புதைந்துள்ளது. இரண்டு வரிகள் மட்டுமே வெளியில் தெரிகின்றன. இதன் நீளம் கணக்கிட முடியவில்லை. இதன் அகலம் 36 செ.மீ. ஆகும். இந்தக் கல்வெட்டும் பங்களநாடு, நவிரமலை சொற்களைத் தாங்கி நிற்கின்றன.

உடைந்த நிலை நடுகல் - 4:

மண்ணில் படுத்த கோலத்தில் உடைந்து போய் ஒரு நடுகல் காணப்படுகிறது. இதைப்பற்றிய செய்திகளை அறிய முடியவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com