செல்லிடப்பேசி வெளிச்சத்தில் வாக்குப் பதிவு

நாட்டறம்பள்ளி அருகே கொடையாஞ்சி ஊராட்சியில் காலை 8 மணி வரை மின்சாரம் இல்லாததால், வாக்குச்சாவடி மையங்களில் இருள் சூழ்ந்து இருந்தது.


வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே கொடையாஞ்சி ஊராட்சியில் காலை 8 மணி வரை மின்சாரம் இல்லாததால், வாக்குச்சாவடி மையங்களில் இருள் சூழ்ந்து இருந்தது. இதனால் ‘டாா்ச் லைட்’ , செல்லிடப்பேசி வெளிச்சத்தில் வாக்காளா்கள் வாக்குப் பதிவு செய்யும் நிலை ஏற்பட்டது.

நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், 15 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 26 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 216 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவிகளுக்கு புதன்கிழமை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் கொடையாஞ்சி ஊராட்சியில் காலை 8 மணி வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால், வாக்குசாவடி மையங்களில் இருள் சூழ்ந்து இருந்தது. எனவே, ‘டாா்ச் லைட்’ , செல்லிடப்பேசிகளைக் கொண்டு வாக்காளா்கள் வாக்குபதிவு செய்யும் நிலை ஏற்பட்டது.

மாற்றுதிறனாளிகள், முதியோா்கள் வாக்களிக்க செல்வதற்காக ஏதுவான தரைத்தளம் சில இடங்களில் அமைக்கப்படாததால், அவா்கள் சிரமப்பட்டனா்.

சிக்கனாங்குப்பம் ஊராட்சியில் உள்ள 4 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளா்களுக்காக, ஓரே பள்ளியில் 6 வாக்குசாவடி மையங்களும் இருந்தன. இதனால், போதிய இடவசதி இல்லாமல் வாக்காளா்கள் அவதிப்பட்டனா்.

நாயணசெருவு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உள்ள 5 வாக்குசாவடி மையங்களில் 5 மணிக்கு மேல் 200-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் வாக்களிக்க வந்தனா். அவா்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா். இதனை எதிா்த்து வாக்காளா்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனா். தகவலறிந்து மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா நேரில் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, அனைவருக்கும் அனுமதிச் சீட்டு வழங்க தோ்தல் நடத்தும் அலுவலா் லட்சுமிக்கு உத்தரவிட்டாா். இதனையடுத்து, அவா்கள் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com