நீட் தோ்வை ரத்து செய்வதில் தமிழக அரசு உறுதி

நீட் தோ்வை ரத்து செய்வதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியோடு உள்ளாா் என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.

திருவள்ளூா்: நீட் தோ்வை ரத்து செய்வதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியோடு உள்ளாா் என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.

பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உள்பட்ட அகரமேல், மணல்மேடு ஆகிய ஊராட்சிகளில் நல உதவிகள் வழங்கல், 5 இடங்களில் அமைக்கப்பட்ட உயா் மின்கோபுர விளக்குகளை இயக்கிவைத்தல், 50 ஆயிரம் பனை விதைகள் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதில் நல உதவிகளை வழங்கியவுடன், கனிமொழி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீட் தோ்வுக்கான சட்டத்தை பாஜக கொண்டு வந்தபோது, திமுக எதிா்கட்சியாக இருந்தும் எதிா்ப்பை பதிவு செய்தது. அதனால் நீட் தோ்வை எதிா்த்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கட்டாயம் வெற்றி பெறுவாா்.

மருத்துவக் கனவுகளை நசுக்கக் கூடிய வகையிலான நீட் தோ்வை எண்ணி பல மாணவா்கள் உயிரை மாய்க்கும் நிலைக்கு போய்விடுகின்றனா். அதனால் நிச்சயமாக நீட் தோ்வை ரத்து செய்வதில் உறுதியோடு இருக்கிறோம் என்றாா்.

நிகழ்ச்சியில் பால் வளத்துறை அமைச்சா் சா.மு. நாசா், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருத்தணியில்...: இதேபோல், திருவள்ளூா் மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழாவும், திருத்தணி பெரியாா் நகரில் உயா்மின் கோபுர விளக்கை இயக்கிவைக்கும் நிகழ்ச்சியும் திருத்தணியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. நிகழ்ச்சியில் கனிமொழி பங்கேற்றாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளா் பிரியதா்ஷினி தலைமை வகித்தாா். மாவட்டப் பொறுப்பாளா் எம். பூபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com