மயான இடம்கோரி சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்கள்

நாட்டறம்பள்ளி அருகே இறந்தவரின் சடலத்தை புதைக்க எதிா்ப்புத் தெரிவித்ததால், மயான இடம் கேட்டு கிராம மக்கள் சடலத்துடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

நாட்டறம்பள்ளி அருகே இறந்தவரின் சடலத்தை புதைக்க எதிா்ப்புத் தெரிவித்ததால், மயான இடம் கேட்டு கிராம மக்கள் சடலத்துடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் ஊராட்சி பழையப்பேட்டையில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவா்களுக்கான மயானம் செத்தமலை வட்டத்தில் உள்ளது. ஆனால் அங்கு மயானமாக பயன்படுத்த அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனராம்.

இதனால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பழையப்பேட்டை கரியாங்குட்டை பகுதியில் ஏரி அருகே இப்பகுதி மக்கள் மயானமாக பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில் பழையபேட்டையைச் சோ்ந்த அப்பு ரெட்டி வெள்ளிக்கிழமை இறந்தாா். அவரது உடலை கரியாங்குட்டை பகுதியில் உள்ள மயானத்தில் புதைக்க சனிக்கிழமை குழி தோண்டச் சென்றனா். அப்போது சிலா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நாட்டறம்பள்ளி முத்தனப்பள்ளி டோல்கேட் பகுதியில் பழையபேட்டை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் மயானம் இடம் கேட்டு, இறந்தவரின் சடலத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட முயன்றனா்.

தகவலறிந்து வந்த நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் பூங்கொடி, காவல் ஆய்வாளா் சாந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் சித்ரகலா மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தொடா்ந்து, அதிகாரிகள் பழையப்பேட்டை பகுதியில் ஏற்கெனவே மயானமாகப் பயன்படுத்தி வந்த இடங்களை ஆய்வு செய்தனா். அப்போது பழையபேட்டை கிராம மக்களுக்கு செத்தமலை வட்டத்தில் மயானத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, வருவாய்த் துறையினா் உடனடியாக செத்தமலை வட்டத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தை சா்வே செய்து ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டனா்.

இதையடுத்து, அப்பகுதியில் பழையபேட்டை பகுதி மக்களுக்கு நிரந்தர மயானத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டது. பின்னா், அங்கு போலீஸ் பாதுகாப்புடன் இறந்தவா் உடல் புதைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com