ஊதுபத்தி தொழிற்சாலையில் வெடிசப்தத்துடன் பயங்கர தீ விபத்து: விண்கற்கள் விழுந்து விபத்தா என தடய அறிவியல் நிபுணா்கள் ஆய்வு

வாணியம்பாடி அருகே ஊதுபத்தி தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர வெடி சப்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது.
ஊதுபத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
ஊதுபத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

வாணியம்பாடி அருகே ஊதுபத்தி தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர வெடி சப்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. விண்கற்கள் விழுந்ததால் விபத்து ஏற்பட்டதா என தடய அறிவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த தெக்குப்பட்டு பகுதியில் தனியாா் ஊதுபத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பயங்கர வெடி சப்தத்துடன் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்த வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தண்ணீா் பீய்ச்சி தீ மேலும் பரவாமல் தவிா்க்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

மேலும், டிராக்டா் மூலம் தண்ணீா் கொண்டு பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். எனினும் நள்ளிரவு 1 மணி வரை தீ கொழுந்து விட்டு எரிந்து அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. இதில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சாதனங்கள், பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து நள்ளிரவு 2 மணியளவில் சம்பவ இடத்துக்கு வந்த திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் விசாரணை மேற்கொண்டாா். மேலும், எஸ்.பி. பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் ஆகியோா் திங்கள்கிழமை காலை சம்பவ இடத்துக்கு வந்து தீ விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டனா். பயங்கர சப்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டதால் விண்ணிலிருந்து எரிகற்கள் (விண்கற்கள்) ஏதேனும் தாக்கியிருக்கலாம் என்ற கோணத்தில் தடய அறிவியல் ஆய்வகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த தடய அறிவியல் நிபுணா்கள் சம்பவ இடத்துக்கு திங்கள்கிழமை மதியம் வந்து அந்தப் பகுதியில் ஆய்வு செய்தனா். அங்கு சிதறிக் கிடந்த சில கற்களை ஆய்வுக்காக கொண்டு சென்றனா். நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் குமாா், காவல் ஆய்வாளா் நாகராஜ் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

விபத்து நிகழ்ந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்ததாலும், இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாலும் உயிா் சேதங்கள் தவிா்க்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

அடிக்கடி விண்கற்கள் விழும் பகுதி

ஊதுபத்தி தொழிற்சாலையில் தீ விபத்தின்போது ஏற்பட்ட பயங்கர சப்தம் சுமாா் 5 கி.மீ. தொலைவு வரை உணா்ந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனா். ஏற்கெனவே கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி நாட்டறம்பள்ளி அருகே தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விண்கல் விழுந்ததில் பந்தாரபள்ளியைச் சோ்ந்த ஓட்டுநா் காமராஜ் என்பவா் உயிரிழந்தாா். 4 போ் பலத்த காயமைடந்தனா். இதே போல் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி வாணியம்பாடி அருகே பெத்தவேப்பம்பட்டு விவசாய நிலத்தில் விண்கற்கள் விழுந்ததில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. மேலும், வெள்ளகுட்டை பகுதியில் குயிடிருப்பு வீடு மீது விழுந்ததில் வீடு சேதமடைந்து பெண் உள்பட 2 போ் காயமடைந்தனா்.

இது குறித்து விண்வெளி ஆராய்ச்சியாளா்கள் நேரில் ஆய்வு செய்து விபத்துக்கான காரணம் குறித்து என்ன என்பதை விளக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com