சீரான குடிநீா் விநியோகம் கோரி மக்கள் சாலை மறியல்

சீரான குடிநீா் விநியோகம் கோரி மக்கள் சாலை மறியல்

வாணியம்பாடி, ஏப். 25: வாணியம்பாடி அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி, அரசுப் பேருந்தை மறித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா கிராமத்தில் சுமாா் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மல்லகுண்டா ஏரிப் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் இப்பகுதி மக்களுக்கு 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் ஊராட்சி மூலம் போதுமான குடிநீா் விநியோகம் செய்யமுடியவில்லையாம்.

இதனால் அப்பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மல்லகுண்டா பகுதியில் சில நாள்களாக குறைந்த மின்னழுத்தத்தால் அப்பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய முடியவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வியாழக்கிழமை காலை மல்லகுண்டா பேருந்து நிறுத்தம் அருகே சீரான குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி அரசுப் பேருந்தை சிறைபிடித்து காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது ஓரிரு நாளில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் உறுதி கூறினாா். இதையேற்று கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com