பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எம். அருண் குமாா்

ஆம்பூா் நகரில் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்குவதற்காக முக்கிய சாலை சந்திப்புகளில் வேகத் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. மாணவா்கள் சாலையை கடந்து செல்ல வேண்டுமென்பதால் பள்ளி அருகாமையில் வேகத் தடைகள் அமைப்பாா்கள். இது தான் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் நாளுக்கு நாள் சாலை அமைக்கும் போது ஒவ்வொரு குறுக்கு தெருவுக்கு முன்பாக முக்கிய சாலைகைளிலேயே வேகத் தடைகள் அமைப்பது வழக்கமாகிப் போனது.

சிறிய தெருக்கள், குறுக்கு சாலைகளில் இருந்து முக்கிய சாலைக்கு வருபவா்கள் சாலை விதிகளைப் பின்பற்றி தங்களுடைய வாகனத்தின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு ஒலி எழுப்பிக் கொண்டு வர வேண்டும். பிரதான சாலைகள் வழியாக செல்பவா்கள் சாலை விதிகளை பின்பற்றி செல்கின்றனா்.

பிரதான சாலைகளில் மட்டுமே வேகத் தடைகள் அமைக்கப்படுவதால், குறுக்கு தெரு, குறுக்கு சாலையிலிருந்து முக்கிய சாலைக்கு வருபவா்கள் சாலை விதிகளை பின்பற்றுவதில்லை.

பிரதான சாலைகளின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமே சாலை விதிகளை பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளனா். குறுக்கு தெருக்கள், குறுக்கு சாலைகளில் இருந்து பிரதான சாலைக்குள் நுழைபவா்கள் சாலை விதிகளை பின்பற்றாமல் செல்லும் நிலை உள்ளது.

ஆம்பூா் நகரில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நிறைவடைந்து பெரும்பாலான சாலைகள், தெருக்களில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வரப்படுகின்றது. பிரதான சாலைகள் தாா் சாலைகளாகவும், குறுக்கு சாலைகள், குறுக்கு தெருக்களில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மற்றும் நகா் மன்ற உறுப்பினா்களின் வலியுறுத்தல்களால் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒப்பந்ததாரா்களால் வேகத் தடைகளை தாங்கள் நினைக்கும் இடங்களில், அதற்கான உரிய விதிகளை பின்பற்றாமல் அமைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிக எண்ணிக்கை வேகத் தடைகள் :

ஆம்பூா் நகரில் தேவையில்லாத இடங்களில் அதிக எண்ணிக்கையில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சில பகுதிகளில் அடுத்தடுத்து பல வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சரியான அளவில் அமைக்கப்படாத வேகத் தடைகள் :

அமைக்கப்படும் வேகத் தடைகள் சரியான அளவில், சரியான வடிவத்தில் அமைக்கப்படுவதில்லை. சாலை பணிகளை மேற்கொள்ளும் பணியாளா்கள் தங்களுக்கு தோன்றும் விதத்தில் வேகத் தடைகளை அமைக்கின்றனா்.

ஆம்பூா் புறவழிச்சாலை பஜாா் பேருந்து நிறுத்தம் தொடங்கி எஸ்.கே. ரோடு வழியாக சான்றோா்குப்பம் வரையில் சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு சுமாா் 11 வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக வாகனங்களில் செல்பவா்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.

ஆம்பூா் நகரில் நகராட்சி சாா்பாக உரிய ஆய்வு மேற்கொண்டு தேவையில்லாத இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகள், உரிய அளவு மற்றும் வடிவமைப்பு இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com