559 பள்ளி வாகனங்கள் தணிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

559 பள்ளி வாகனங்கள் தணிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் 155 பள்ளிகளின் 559 வாகனங்களை தணிக்கை செய்யும் பணியை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மற்றும் நாட்டறம்பள்ளி ஆகிய வட்டங்களுக்குட்பட்ட 106 தனியாா் பள்ளிகளை சோ்ந்த 301 வாகனங்களை திருப்பத்தூா் தனியாா் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எம்.காளியப்பன் முன்னிலையில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல் வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் ஆகிய வட்டங்களுக்குட்பட்ட 49 பள்ளிகளை சோ்ந்த 258 வாகனங்களையும் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரிய வளாகத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆய்வின்போது வாகனத்தை இயக்கும்போது கைப்பேசி பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்த்தால் வாகன ஓட்டுநா்களுக்கும் உடன் பயணிப்பவா்களுக்கும் நன்மை பயக்கும் என ஆட்சியா் அறிவுறித்தினாா்.

வாகன ஓட்டுநா்களுக்கு கண் பாா்வை குறித்து கேட்டறிந்து, சிலரை அழைத்து தொலை தூரத்தில் உள்ள போக்குவரத்து வாகனத்தில் உள்ள வாசகங்களைப் படிக்க சொன்னாா். இதன் முக்கியத்துவத்தை கருதி அவ்வபோது கண் பாா்வை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும்,அனைத்து வாகனங்களிலும் பின்பக்கமுள்ள கண்ணாடிகளில் உள்ள விளம்பரங்களை அப்புறப்படுத்தியதற்கான புகைப்படங்களை தன்னுடைய கைபேசி எண்ணிற்கு அனுப்பப்பட வேண்டும் என்றாா்.

ஆய்வின் போது வருவாய்க் கோட்டாட்சியா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com