தொட்டி இருக்கு; தண்ணீர்தான் இல்லை..!

ஆவடி நகரில் 8 மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டு வெறும் காட்சிப் பொருளாக உள்ளன. இந்தத் தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி

ஆவடி நகரில் 8 மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டு வெறும் காட்சிப் பொருளாக உள்ளன. இந்தத் தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

பரப்பளவிலும், மக்கள்தொகையிலும் ஆவடி மிகப் பெரிய நகராட்சியாகும். இங்குள்ள 97 ஆயிரம் வீடுகளில் சுமார் 4 லட்சம் பேர் வசிக்கின்றனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின் பின்பக்கக் கரை ஆவடியைத் தொடுகிறது.

இருப்பினும் இங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. ஒரு குடம் குடிநீர் ரூ.5-க்கு விற்கப்படுகிறது.

ஆவடி நகராட்சி குடிநீர்த் திட்டத்துக்கு 2011-ஆம் ஆண்டு ரூ.103.84 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டன. 8 மேல்நிலைத் தொட்டிகள், 32.5 கி.மீ. தூரத்துக்கு குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளன. பணியின் காலம் 24 மாதங்கள் எனத் தொடங்கி 4 வருடமாக நடைபெற்று வருகிறது.

5 கோடி லிட்டர் தண்ணீர் தேவை!

"ஆவடியில் நாளொன்றுக்கு 5 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் சென்னை குடிநீர் வாரியம் 8.5 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது.

இன்னும் 3 மாதத்தில் குடிநீர் வழங்கல் திட்டம் செயல்படும். புழல் ஏரியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் சுமார் 20 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் போட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வோம்' என ஆவடி நகராட்சி அலுவலர்கள் கூறினர். புழல் ஏரியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், ஆவடிக்கு தேவையான அளவு தண்ணீர் தரமுடியாது என குடிநீர் வாரிய அலுவலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஆவடி நகர்மன்றத் தலைவர் சா.மு.நாசர் கூறியதாவது:

புழல் ஏரியிலிருந்து தண்ணீர் வழங்கப்படும் என்று கூறிதான் ரூ.108 கோடியில் திட்டம் தொடங்கினர். இப்போது புழல் ஏரியில் தண்ணீர் இல்லை. ஆகவே தேவையான குடிநீர் வழங்க முடியாது என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். இப்போது 8 மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டு வெறும் காட்சிப் பொருளாக உள்ளன.

 மக்களின் தண்ணீர் தேவைக்கு ஆழ்துளைக் கிணறுகள் போட்டு, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி ஏற்றி குழாய் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

 ஆவடியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு குடம் தண்ணீர் ரூ.5-க்கு விற்கப்படுகிறது.

இந்த நிலையில் எப்படி இருந்தாலும், விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com