எல்லைப் பிரச்னை: 25 ஆண்டுகளாக தவிக்கும் லெனின் நகர்; தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு

எல்லைப் பிரச்னையால் தங்கள் பகுதியில் 25 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அல்லல்படும்

எல்லைப் பிரச்னையால் தங்கள் பகுதியில் 25 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அல்லல்படும் அம்பத்தூர் லெனின் நகர் மக்கள், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
 அம்பத்தூர் லெனின் நகர் அருகில் உள்ளது சபரி ஐயப்பன் நகர். இது கடந்த 1990-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கு சுமார் 450 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த லெனின் நகர் சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்தின் எல்லையில் உள்ளது.
 இதனால் இப்பகுதி மக்கள் பெரும்பாலோர் வீட்டு வரியினை, சென்னை மாநகராட்சியிலும், ஒரு சிலர் ஆவடி நகராட்சியிலும் செலுத்துகின்றனர்.
 சென்னை மாநகராட்சிக்கு வரி செலுத்துபவர்களுக்கு ஆவடி நகராட்சி ஜப்தி நோட்டீஸ் அனுப்புவதும், ஆவடி நகராட்சியில் வரி செலுத்துபவர்களுக்கு, சென்னை மாநகராட்சி ஜப்தி நோட்டீஸ் அனுப்புவதும் வாடிக்கையாகிவிட்டது. தாங்கள் யார் நிர்வாகத்தின் கீழ் இருக்கிறோம் என்று தெரியாமல் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தவிக்கின்றனர்.
 25 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் சாலை வசதி, குடிநீர், கழிவுநீர்க் கால்வாய், தெரு விளக்கு என எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடம் சொத்து வரி வசூல் செய்ய மட்டும் ஆவடி நகராட்சியும், சென்னை மாநகராட்சியும் போட்டி போடுகின்றன.
 இந்த நகரை ஒட்டி புழல் ஏரிக்குச் செல்லும் 60 அடி ஓடை இருந்தது. இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 2 அடி அகல கால்வாயாக உள்ளது.
 இதுகுறித்து கேட்டபோது ஆவடி நகராட்சி ஆணையாளர் மதிவாணன் கூறியது:
 நீங்கள் குறிப்பிடும் லெனின் நகர் சென்னை மாநகராட்சியில் வருகிறது. எங்களுக்கு சம்பந்தமில்லை. சொத்துவரி பற்றி கூறினீர்கள். அது குறித்து விசாரிக்கிறேன் என்றார்.
 இப்பகுதி வணிகர் சங்கப் பிரமுகர் ஷெரிப் கூறியது:
 அரசு அதிகாரிகள் வருவதே வரி வசூல்செய்யத் தான். அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டால் வழக்கு நிலுவையில் உள்ளது என்கின்றனர்.
 எங்கள் பகுதியில் அவசரம் என்றால் ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை வாகனம் கூட வர முடியாது. இதைவிட கொடுமை, திருட்டு உள்ளிட்ட சட்டம்-ஒழுங்குப் பிரச்னை என்றால் திருமுல்லைவாயல் காவல் துறை அதிகாரிகள் அம்பத்தூருக்கு விரட்டி அடிப்பார்கள். அம்பத்தூர் காவல் துறையினர் திருமுல்லைவாயலுக்கு விரட்டி அடிப்பார்கள்.
 எனவே, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போகிறோம் என்றார்.
 ஆவடி நகராட்சியோ, சென்னை மாநகராட்சியோ இருதரப்பு அதிகாரிகளும் கலந்து பேசி எல்லையை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
 மேலும் இந்த பகுதியின் அடிப்படை பிரச்னைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பொது மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com