/

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி 4-ஆவது முறையாக ஆர்ப்பாட்டம்: கடைக்கு "சீல்' வைத்த அதிகாரிகள்

கும்மிடிப்பூண்டி பஜாரில் செயல்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் தொடர்ந்து 4-ஆவது முறையாக

Updated On :22 அக்டோபர் 2018, 3:12 am

கும்மிடிப்பூண்டி பஜாரில் செயல்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் தொடர்ந்து 4-ஆவது முறையாக போராட்டம் நடத்தியதையடுத்து, அக்கடைக்கு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை "சீல்' வைத்தனர்.
கும்மிடிப்பூண்டி பஜாரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுக் கடை திறக்கப்பட்டது. இக் கடையானது கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் வங்கிகள், வணிக வளாகங்களுக்கு மத்தியிலும் அமைந்துள்ளது. இந்த மதுக் கடையைக் கடந்து தான் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் செல்ல வேண்டும். 
மேலும், டாஸ்மாக் கடையை  ஒட்டியுள்ள வங்கிகளுக்கு வரும் மகளிர் சுய உதவிக் குழு பெண்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மாணவ, மாணவிகளும், மகளிர் குழு பெண்களும், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியினர், பொதுமக்களும் இந்த மதுக் கடையால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், எனவே இக்கடையை மூடக் கோரியும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அந்தக் கடை மூடப்பட்டாலும் சில நாள்கள் கழித்து மீண்டும் திறக்கப்பட்டது. இது போல கடந்த 2 மாத காலத்தில் 3 முறை  கடையை மூடக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதும், ஒவ்வொரு முறையும் மூடப்பட்டு, சில நாள்கள் கழித்து மீண்டும் கடை திறக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்தது.
 இந்நிலையில், 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதையடுத்து, அக் கடையை மூடக்கோரி வழக்குரைஞர் வேலு தலைமையில், பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வருவாய் ஆய்வாளர் கந்தசாமி, டாஸ்மாக் கடைக்கு "சீல்'  வைத்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.
 ஆனால் அங்கிருந்த டாஸ்மாக் ஊழியர்கள் டாஸ்மாக் மேலாளர் உத்தரவின்படி, நாளை முதல் கடையை மூடுவதாக அறிவித்தபோது வருவாய்த் துறையினருக்கும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எனினும், பொதுமக்கள் கடையை உடனே மூடக்கோரி கோஷம் எழுப்பியதையடுத்து, கும்மிடிப்பூண்டி போலீஸார் முன்னிலையில் டாஸ்மாக் கடைக்கு அதிகாரிகள் "சீல்' வைத்தனர் .
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.