8 நாளில் பசுந்தீவன உற்பத்தி : விவசாயிகளுக்கு உதவும் கால்நடைத் துறை

விவசாயிகள், குறைந்த பட்சம் 8 நாள்களில் கால்நடைகளுக்கான பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யும் வகையில், புதிய ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணத்தை மானிய விலையில் வழங்க

விவசாயிகள், குறைந்த பட்சம் 8 நாள்களில் கால்நடைகளுக்கான பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யும் வகையில், புதிய ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணத்தை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் தங்கள் பகுதிகளில் கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில் கால்நடைகளை வளர்க்கும் தொழிலையும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்குத் தேவையான பசுந் தீவனங்களை அவர்கள் தங்கள் விளைநிலங்களில் இருந்தே எளிதாக பெற முடியும்.
ஆனால், விளைநிலங்கள் இல்லாதோர் மற்றும் நகர்ப்புறங்களில் கால்நடைகளை வீட்டில் வைத்து வளர்த்து வருவோர் பசுந்தீவனத்தை வெளியில் இருந்தே விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. மேலும், கோடைகாலங்களில் வறட்சியால் பசுந்தீவனம் கிடைக்காத நிலையில் வைக்கோலை விலைக்கு வாங்க வேண்டி உள்ளது. இவற்றை கால்நடைகளுக்கு அளித்தாலும் போதுமான பால் உற்பத்தி கிடைப்பதில்லை.
மண் இல்லாமல்.... : இதைத் தவிர்க்கும் வகையில் விளைநிலங்கள் இல்லாதோர் மற்றும் நகர்ப்புறங்களில் கால்நடைகளை வளர்ப்போர் பயன்பெறும் நோக்கத்தில் தண்ணீர் மற்றும் விதைகளைக் கொண்டு புதிய முறையில் ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணங்கள் மூலம் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும் .
இதை கால்நடை பல்கலைக்கழக பால்பண்ணை ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. இதில், தண்ணீர் மற்றும் விதையைப் பயன்படுத்தி 8 நாள்களில் ஹைட்ரோபோனிக்ஸ் உபகரணங்கள் மூலம் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யலாம். மேலும், கோடைகாலத்தில் குறைந்த அளவு தண்ணீர் மற்றும் விதைகளை பயன்படுத்தி மண் இல்லாமல் பசுந்தீவனம் உற்பத்தி செய்யலாம்.
விதைகளை முளைகட்டி...: இம்முறையில் துணியில் தானியங்களை நனைய வைத்து ஒரு நாள் முழுவதும் ஈரப்பதத்தில் முளைகட்ட விடவேண்டும். அதையடுத்து மறுநாள் ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணத்தில் உள்ள அடுக்கு
களில் தேவைக்கேற்ப முளைகட்டிய விதைகளை பரப்பிவிட வேண்டும். அதைத் தொடர்ந்து 100 லிட்டர் கொள்ளளவு உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து, குறைந்த அளவு விசைத் திறன் கொண்ட மினி மோட்டார் குழாய் மூலம் ஒவ்வொரு அடுக்கிலும் சொட்டு நீர் தெளித்து, ஈரப்பதமாக இருக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதேபோல், ஒவ்வொரு நாளும் அடுக்குகளை மாற்றிக் கொண்டே வருவதன் மூலம் சுழற்சி முறையில் கால்நடைகளுக்குத் தேவையான சுத்தமான பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யலாம். இந்த ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணத்தை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆகியோருக்கு முதல் கட்டமாக மானியத்தில் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருவதாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
8 நாள்களில் தீவன உற்பத்தி : இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் பணியாளர் ஒருவர் கூறியது: மண் பயன்படுத்தாமல் குறைந்த அளவு தண்ணீர் மற்றும் தானிய விதைகளைப் பயன்படுத்தி, ஹைட்ரோபோனிக்ஸ் உபகரணங்களில் உள்ள அடுக்குகளில் பரப்பி, ஒவ்வொரு நாளும் அடுக்குகளை சுழற்சி முறையில் மாற்றிக் கொண்டே வரவேண்டும்.
இதில் தானிய விதைகளான கம்பு, சோளம் மற்றும் மக்காச்சோளம் ஆகியவைகளை ஒருநாள் ஈரத்துணியில் முளைகட்டி பரப்ப வேண்டும். இதில் ஒரு கிலோ விதைக்கு 8 நாள்களில் 6 கிலோ வரையில் சுத்தமான பசுந்தீவனம் கிடைக்கும்.
இதேபோல், ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையில் தேவையான அளவு பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும். இம்முறையில் உற்பத்தி செய்யப்படும் தீவனத்தில் கழிவு என்பதே கிடையாது. அதேநேரத்தில் சத்துக்களும் அதிகம் என்பதால், இதை கால்நடைகளுக்கு அளிப்பதன் மூலம் பால் உற்பத்தியும் அதிகரிக்கும். தற்போதைய நிலையில் இதன் தேவை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
75 சதவீத மானியம் : இது குறித்து கால்நடைத்துறை இணை இயக்குநர் கண்ணையன் கூறியது: இந்த ஹைட்ரோபோனிக்ஸ் உபகரணமானது, குறைந்த அளவு விசைத் திறன் கொண்ட மினி மோட்டார், தண்ணீர் தொட்டியுடன் சேர்த்து ரூ.20 ஆயிரம் ஆகும்.
இது, தற்போது விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக 75 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
இதில் பயனாளிகள் தங்களின் பங்குத் தொகையான 25 சதவீதத்தை முதலில் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் படி, மாநில அளவில் முதல் கட்டமாக ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணங்கள் 1,100 பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் 40 உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com