ஒரே நாளில் 20 பேரைக் கடித்த வெறி நாய்கள்

திருத்தணி அருகே ஒரே நாளில் 20 சிறுவர்களை வெறி நாய்கள் துரத்திக் கடித்தன.

திருத்தணி அருகே ஒரே நாளில் 20 சிறுவர்களை வெறி நாய்கள் துரத்திக் கடித்தன.  
 திருத்தணி ஒன்றியம், வீரகநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்டது இஸ்லாம் நகர். இங்கு, 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், இங்கு அரசினர் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
 இந்நிலையில், இஸ்லாம் நகர் பகுதியில் வெறி நாய்கள் கடந்த இரு நாள்களாக சுற்றி திரிந்தன. புதன்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவ-மாணவியர் மற்றும் தெருவில் விளையாடிய  சிறுவர்களை வெறி நாய்கள் துரத்திக் கடித்துள்ளன.
இதில், ஆதீரா(7), சலீம்(6),  மஸ்தான்(11), பாய்ஸ் (11), சலீம்முல்லா(12), முகமது அலி (3), ஆயிஷா (7), பாத்திமா (10) உள்பட
18 மாணவ-மாணவிகள், பாஷா பாய் (32)  காதர்பாஷா(56) ஆகிய இருவர் என மொத்தம், 20 பேரை வெறி நாய்கள் கடித்து குதறியுள்ளன.
 இதில் காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வெறி நாய்கள் தொடர்ந்து இஸ்லாம் நகரில் சுற்றித்திரிவதால், புதன்கிழமை பள்ளிக்குச் சென்ற மாணவ-மாணவிகள் தங்களது கைகளில் கம்புடன் சென்றனர். அதே போல் மாலையும் கம்புகளுடன் வீட்டுக்குத் திரும்பினர்.
  வெறி நாய்களைப் பிடிக்க வேண்டும் என ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இஸ்லாம் நகர் மக்கள் கூறுகின்றனர்.
 எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து, இஸ்லாம் நகரில் சுற்றித்திரியும் வெறி நாய்களைப் பிடித்து காட்டில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com