இருசக்கர வாகனப் பேரணி மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
By DIN | Published On : 01st April 2019 06:19 AM | Last Updated : 01st April 2019 06:19 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி இருசக்கர வாகனங்களின் பேரணி மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திருத்தணி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 329 வாக்குச் சாவடிகளிலும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, உதவி தேர்தல் அலுவலர் பவணந்தி தலைமையில் வருவாய்த் துறையினர் பல்வேறு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, ஞாயிற்றுக்கிழமை 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மூலம் விழிப்புணர்வுப் பேரணி நடந்தது. இப்பேரணியை கோட்டாட்சியர் பவணந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகன ஊர்வலம், திருத்தணி புறவழிச்சாலை, சித்தூர் சாலை, கமலா திரையரங்கம், ம.பொ.சி. சாலை வழியாக நகராட்சி அலுவலகம் வரை வந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள், "அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்' என விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.
பேரணி தொடக்க நிகழ்வில் திருத்தணி தாசில்தார் செங்கலா, வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் உள்பட வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.