கிரிக்கெட் போட்டியில் காட்டூர் அணி சாம்பியன்
By DIN | Published On : 01st April 2019 07:38 AM | Last Updated : 01st April 2019 07:38 AM | அ+அ அ- |

மீஞ்சூரில் அதானி குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடரில் காட்டூர் காலனி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
காட்டுப் பள்ளியில் அதானி துறைமுகம் இயங்கி வருகிறது. இக்குழுமத்தின் அறக்கட்டளை சார்பில் அதானி பல்லவா 20 ஓவர் கிரிக்கெட் தொடர் மீஞ்சூர் சந்திரபிரபு ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. அதில் செங்கழுநீர்மேடு அணியும் காட்டூர் காலனி அணியும் மோதின. முதலில் ஆடிய செங்கழுநீர்மேடு அணி 20 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய காட்டூர் காலனி அணி 18-ஆவது ஓவரில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது.
இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அதானி குழும சென்னை அலுவலகப் பொது மேலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். இக்குழுமத்தின் தென் பிராந்திய முதன்மை நிர்வாக அலுவலர் என்னரசு கருநேசன், வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு சாம்பியன் கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினார். இவ்விழாவில் இந்திய விமானப்படையின் முன்னாள் அதிகாரி உன்னி நாயர் மற்றும் அதானி நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.