அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சரத்குமார் பிரசாரம்
By DIN | Published On : 01st April 2019 09:02 AM | Last Updated : 01st April 2019 09:02 AM | அ+அ அ- |

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
அதிமுக சார்பில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக வேணுகோபாலும், பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக க.வைத்தியநாதனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் அருகே ஈக்காடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்துப் பேசியது:
அதிமுக தலைமையில் வாக்கு வங்கிகளைக் கொண்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பல்வேறு வகையான நலத் திட்டங்களை செயல்படுத்த மத்தியிலும் நிலையான ஆட்சி அமைய வேண்டும். அதற்கு இக் கூட்டணி வெற்றி பெற பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்குத் தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும். பொதுமக்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில், முன்னாள் முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது அனைவரும் அறிந்ததே என்றார்.
இதேபோல், பூந்தமல்லி, திருவள்ளூர், மணவாளநகர், ஈக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்டச் செயலர் சிறுணியம் பலராமன், ஒன்றியச் செயலர் புட்லூர் சந்திரசேகர் உள்ளிட்ட கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.