அமமுக பிரமுகர் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
By DIN | Published On : 17th April 2019 01:08 AM | Last Updated : 17th April 2019 01:08 AM | அ+அ அ- |

திருவள்ளூரில் அமமுக பேச்சாளர் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி தேர்தலுடன், பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள்கள் மற்றும் பணம் கொடுப்பதைத் தவிர்க்கும் வகையில், பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமமுக பேச்சாளராக இருந்து வரும் பொன்முடியின் வீட்டில், வாக்காளர்கள் பணம் பெற்றுக் கொள்வதற்கான டோக்கன் வழங்குவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருவள்ளூர் தலைமை அஞ்சல் நிலையம் எதிரே புங்கத்தூரில் உள்ள அவரது வீட்டில், பறக்கும் படை அதிகாரிகள் சதீஷ் தலைமையில் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் முக்கால் மணி நேரம் சோதனை மேற்கொண்டதில், எவ்வித பணம், பரிசுப் பொருள்கள் மற்றும் ஆவணங்கள் எதுவும் சிக்காததால், பறக்கும் படை அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சோதனையின் போது அங்கு அமமுகவினர் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...