கழிவுகளை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சாலையோரத்தில் கழிவுகளைக் கொட்டி எரிப்பதால் புகை சூழ்ந்து குடியிருப்புகளில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு


சாலையோரத்தில் கழிவுகளைக் கொட்டி எரிப்பதால் புகை சூழ்ந்து குடியிருப்புகளில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், பூந்தமல்லி அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்கத்தினர் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டனர்.
பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி சாலையோரத்தில் நாள்தோறும் பல்வேறு வகையான கழிவுகளைக் கொட்டி எரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாகக் கூறி, அந்த குடியிருப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை சென்று, ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமாரை முற்றுகையிட்டு மனு அளித்தனர். ஆனால், தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், பெட்டியில் மனுக்களை போட்டு விட்டுச் செல்லுமாறும் கூறிச் சென்றார்.     
 இதுகுறித்து பூந்தமல்லி அடுக்குமாடிக் குடியிருப்போர் நலச் சங்கத்தின் நிர்வாகி அம்ஷத் பாஷா தலைமையில் நிர்வாகிகள் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமாரிடம் அளிக்க வைத்திருந்த மனு: 
பூந்தமல்லி சென்னீர்குப்பத்தில் சாலையின் இருபுறமும் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகிறோம். இந்நிலையில், சாலையோரம் காட்டுப்பாக்கம், கரையான்சாவடி, வேலப்பன்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை கொட்டி விட்டுச் செல்கின்றனர். பின்னர், இரவு நேரங்களில் தீ வைத்துச் சென்று விடுகின்றனர். இதனால் குடியிருப்புகளில் இருக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன், புகையால் பெரியவர்கள், சிறியவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து, குப்பை கொட்டுவோரிடம் கூறினாலும், அதை பொருட்படுத்துவதில்லை. தட்டிக் கேட்பவர்களின் குடியிருப்பு மீது இரவு நேரத்தில் கல்வீசி தாக்குகின்றனர். 
இதனால் இரவு நேரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் தங்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, குப்பைகளைக் கொட்டுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com