தேசிய மாணவர் படை முகாமில் சிறப்பிடம் பெற்ற கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மெடிக்கல் யூனிட் மற்றும் தேசிய மாணவர் படை சார்பில் 2019-20ஆம் ஆண்டிற்கான முகாம் கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்றது. லெப்டினன்ட் காமேண்டன்ட் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் தேசிய மாணவர் படை மாணவர்கள் 25 பேர் பங்கேற்றனர்.
முகாமில் மாணவர் அணிவகுப்புப் பயிற்சி, யோகா பயிற்சியும், பல தரப்பட்ட வல்லுநர்களின் சிறப்பு வகுப்புகளும், உடற்பயிற்சி, கால்பந்து, கைப்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் பங்கேற்ற கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கால்பந்து போட்டியில் முதலிடத்தையும், தடகளப் போட்டிகளில் இரண்டாமிடம் உள்பட பல்வேறு பரிசுகளை வென்றனர்.
விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமையாசிரியர் வே.ரேவதி தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் வா.பாலமுருகன் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் சிவகுமார், வனிதா, காஞ்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொ.பூபாலன், பொருளாளர் ஆர்.பொன்னுதுரை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.
விழா ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் சா. அருணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.