ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.1.50 கோடி அரசு நிலம் மீட்பு: வருவாய்த் துறையினர் அதிரடி
By DIN | Published On : 06th February 2019 05:44 AM | Last Updated : 06th February 2019 05:44 AM | அ+அ அ- |

திருவள்ளூர் அருகே குடிசை மாற்று வாரியத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு நிலம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததை அடுத்து அவை செவ்வாய்க்கிழமை அதிரடி நடவடிக்கை மூலம் அகற்றப்பட்டன.
வருவாய்த் துறை அதிகாரிகள், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆகியோர் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு மீட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1.50 கோடியாகும்.
திருவள்ளூர் அருகேயுள்ள நத்தமேடு கிராமத்தில் திருநின்றவூர்-பெரியபாளையம் செல்லும் சாலையில் அரசு புறம்போக்கு புஞ்சை அனாதீனம் 6 ஏக்கர் நிலம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு ஒதுக்கப்பட்டது. இந்த இடம் நீர் நிலை புறம்போக்குகளில் உள்ளவர்களுக்கு வீடு கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த நிலத்தையும், தேசிய நெடுஞ்சாலைப் பகுதியையும் ஆக்கிரமித்து வணிக வளாகம் அமைத்துள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமாருக்கு தகவல் வந்தன.
இதையடுத்து அந்த இடத்தை ஆய்வு செய்யுமாறு திருவள்ளூர் வட்டாட்சியர் சீனிவாசனுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஏற்கெனவே வருவாய்த் துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் தானாக ஆக்கிரமிப்பை அகற்ற முன்வராத நிலையில், சம்பவ இடத்துக்கு மண்டல வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறையினர், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் சென்றனர்.
கிராம பதிவேடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்த அவர்கள், தேசிய நெடுஞ்சாலை மற்றும் குடிசை மாற்று வாரியத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு நிலத்தில் 6 குடியிருப்புகளாகவும், சிமென்ட் கடை, மரக்கடை, இரும்பு கடை, டைல்ஸ் கடைகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததை அறிந்தனர். அதைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
மண்டல வட்டாட்சியர் வசந்தி, திருவூர் வருவாய் ஆய்வாளர் ஜெயதேவி, கிராம நிர்வாக அலுவலர்கள் புகழேந்தி, கல்யாணி, மணிகண்டன், மார்ட்டின், பானு, தேசிய நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் ராஜ்கமல் மற்றும் குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...