திருவள்ளூரில் காசநோய், ஹெச்ஐவி பரிசோதனைக்கு நவீன ஆம்புலன்ஸ் வாகனங்கள்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
By DIN | Published On : 06th February 2019 04:09 AM | Last Updated : 06th February 2019 04:09 AM | அ+அ அ- |

திருவள்ளூர் மாவட்டத்தில் காசநோய், ஹெச்ஐவி பரிசோதனைகளுக்காக இரு நவீன ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
மாநில அளவில் எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் காசநோய் ஒழிப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு கிராமங்களிலும் இயங்கும் நவீன ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் ஹெச்ஐவி தொற்று மற்றும் காசநோய் பாதிப்புகள் குறித்து நேரில் பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்காக புதுதில்லியிலிருந்து நவீன ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒவ்வொருவரும் தங்களின் உடல் நிலை குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடியும். திருவள்ளூர் கலைச்சங்கம் வளாகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நவீன வாகனங்களை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனம் மூலம் அவரவர் உடல் நிலையை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குக்கிராமத்துக்கும் மருத்துவக் குழு மூலம் நேரில் சென்று பரிசோதனை செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க மருத்துவ அலுவலர் கெளரிசங்கர் மற்றும் காசநோய் தடுப்பு திட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...