செங்கல் சூளை அமைக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
By DIN | Published On : 12th February 2019 05:08 AM | Last Updated : 12th February 2019 05:08 AM | அ+அ அ- |

திருவள்ளூர் அருகே சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலான செங்கல்சூளை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து திருவள்ளூரை அடுத்த வெள்ளியூர் கிராம பொதுமக்கள் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமாரை சந்தித்து அளித்த மனுவில் கூறியது:
கிராமத்தில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர். கிராமத்தின் பாரதி நகர் எல்லையில் குடியிருப்புகளுக்கு அருகே சாலையோரத்தில் தனியார் செங்கல் சூளை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுவழிச் சாலையும் உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே இப்பகுதியில் சூளை செயல்பட்டால், அப்பகுதிக்கு வந்து செல்லும் லாரிகளால் மாணவ, மாணவியர் விபத்துகளைச் சந்திக்கும் அபாயம் உள்ளது.
அத்துடன் கால்நடைகள் பாதிப்பு, நீராதாரம், விளைநிலங்கள் மாசுபடும். எனவே இப்பகுதியில் செங்கல் சூளை அமைக்கக் கூடாது என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.