அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலை விழா
By DIN | Published On : 04th January 2019 04:34 AM | Last Updated : 04th January 2019 04:34 AM | அ+அ அ- |

திருவள்ளூர் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற கலைவிழா போட்டிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், மாணவ, மாணவியர் தங்கள் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் நோக்கத்தில் 35 வகையான தனித் திறன் மற்றும் குழுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இம்மாவட்டத்தில் 14 வட்டாரங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகள் ஒருங்கிணைத்து இப்போட்டிகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதில், கடம்பத்தூர் வட்டார அளவிலான கலைவிழா போட்டிகள், இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் ரகுபதி தலைமை வகித்து போட்டியைத் தொடங்கி வைத்தார். இதில் குழு நடனம், தப்பாட்டம், காவடி ஆட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 35 பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியைகள் நடுவர்களாக விளங்கினர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மேற்பார்வையாளர் சொர்ணத்தாய் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.
இப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர் வரும் 9-ஆம் தேதி மணவாளநகர் ஜேக்கப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.