அரசு மருத்துவமனையில் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டம் தொடக்கம்
By DIN | Published On : 04th January 2019 01:45 AM | Last Updated : 04th January 2019 01:45 AM | அ+அ அ- |

அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுகாதாரத் துறை சார்பில் உடனே பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் திட்டத்தை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்த அரசு உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்த கணினி பதிவு விவரங்கள் அனைத்தும் சுகாதாரத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டன. இனிமேல் சுகாதாரத் துறை மூலம் மட்டுமே பிறப்பு இறப்புச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை கண்காணிப்பாளர் சேகர் தலைமை வகித்தார். பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை இயக்குநர் தயாளன் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்களை வழங்கினார்.
அத்துடன், "பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு 16 பரிசுப் பொருள்கள் அடங்கிய அம்மா பரிசுப் பெட்டகம், ஜனனி சுரக்ஷா திட்டம் மூலம் ரூ. 700-க்கான காசோலை ஆகியவற்றையும் அவர் வழங்கினார். இதேபோல், திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துமனையில் கடந்த நவ. 23 முதல், ஜன.2 வரை பிறந்த 593 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள், அம்மா பரிசுப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணராஜ், குடும்ப நலத் துறை துணை இயக்குநர் இளங்கோவன் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.