கோயிலை சேதப்படுத்தியதாக இருவர் கைது
By DIN | Published On : 04th January 2019 04:33 AM | Last Updated : 04th January 2019 04:33 AM | அ+அ அ- |

திருவள்ளூர் அருகே கோயில் வளாகத்தில் இருந்த அஷ்டலிங்கத்தை சேதப்படுத்தியதாக இளைஞர்கள் 2 பேரை மணவாளநகர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது: திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த நுங்கம்பாக்கத்தில் எல்லையம்மன் திருக்கோயில் உள்ளது.
இக்கோயில் குளக்கரையில் மிகவும் பழைமையான அஷ்ட லிங்கம், நந்தி சிலையை பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 31-ஆம் தேதி இரவு இக்கோயில் குளக்கரையில் சிலர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜன. 1 காலையில் பக்தர்கள் வந்து பார்த்தபோது அஷ்டலிங்க சிலை சேதப்படுத்தப் பட்டிருந்ததுடன், நந்தி சிலை காணாமல் போயிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து, கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் மணவாளநகர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சிலைகளை சேதப்படுத்தியது அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்தன்(30), அய்யனார்(32) என்பது தெரியவந்ததால் 2 பேரையும் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் அருண்(29) என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.