பேரூராட்சி அலுவலகம் முன் வியாபாரிகள் முற்றுகை
By DIN | Published On : 04th January 2019 01:46 AM | Last Updated : 04th January 2019 01:46 AM | அ+அ அ- |

பொன்னேரி பேரூராட்சிக்கு சொந்தமான 51 கடைகளுக்கான ஏலத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், 9 மாத வாடகையைப் பெற்றுக்கொள்ள வலியுறுத்தி, வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.
பொன்னேரி பேரூராட்சியில் உள்ள கடைகளுக்கு ஆண்டு தோறும் வாடகை உயர்வு மற்றும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகை நீட்டிப்பு ஆகியவை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2018 பிப்ரவரி 16-ஆம் தேதி, பொன்னேரி பேரூராட்சி செயல் அலுவலர், மேற்கண்ட கடைகள் அனைத்துக்கும் ஏப்ரல் 3-ஆம் தேதி ஏலம் நடத்தப்படும் என அறிவித்தார்.
அப்போது, போதிய கால அவகாசம் தராமல் ஏலத் தேதியை அறிவித்தமைக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கடைகள் ஏலத்துக்கு தடை விதிக்கக் கோரி, பொன்னேரி சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை ஏற்றுக்கொண்ட சார்பு நீதிமன்றம் ஏலத்துக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், வியாபாரிகள் தாங்கள் நடத்தி வரும் கடைகளுக்கான 9 மாத வாடகையை பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை செலுத்த முயன்ற போதும், அதை அதிகாரிகள் வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கடைகளுக்கான 9 மாத வாடகையைப் பெற்றுக்கொள்ள வலியுறுத்தி, வியாபாரிகள் தங்களின் கடைகளை அடைத்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். அப்போது, பேரூராட்சி அலுவலர்கள் வாடகைக் கட்டணத்தை வரையோலையாக செலுத்தும்படி அவர்களிடம் கூறியதைத் தொடர்ந்து வியாபாரிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.